பாஜக ஆட்சியை விமர்சித்ததாக சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதால், சோபியாவிற்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசிற்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போராடியவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதேபோல் பாஜக மற்றும் அதிமுகவின் பல்வேறு செயல்கள் தமிழக மக்களுக்கு எதிராக இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள், மக்களிடையே கடும் கண்டங்கள் எழுந்தன.

அந்த காலகட்டத்தில் தமிழ்நாடு பாஜக தலைவராக தமிழிசை சவுந்தரராஜன் இருந்தபோது, 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அதே விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற மாணவி, “பாசிச பாஜக ஒழிக” என்று கோஷமிட்டுள்ளார்.

இதனையடுத்து, விமானத்தில் இருந்து வெளியே வந்த தமிழிசை சவுந்தரராஜன் இது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்து, மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் மாணவி சோபியா மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து, இரவோடு இரவாக அவரை கைது செய்தனர்.

இதனைத்தொடர்ந்து சோபியாவின் தந்தை ஏ.ஏ.சாமி சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து கைது செய்யப்பட்டது முதல் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டது வரை எனது மகளுக்கு காவல்துறையினர் கடும் மன உளைச்சல் ஏற்பட்டது.

இதில் காவல்துறையினர் மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சோபியா உடல்ரீதியாகவும், மனது ரீதியாகவும் கடும் இன்னலுக்கு ஆளாகினார். இந்த வழக்கில் சோபியாவுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயசந்திரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று (2.3.2022) தீர்ப்பு வழங்கப்பட்டது.

மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயசந்திரன் அளித்துள்ள தீர்ப்பில், “தமிழிசை சவுந்தரராஜன் முன்பு பாஜகவை விமர்சித்ததாக மாணவி சோபியா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது. எனவே, மாணவியின் தந்தைக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்.

மேலும் குற்றம்சாட்டப்பட்ட புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் திருமலையிடமிருந்து 50 ஆயிரம் ரூபாயையும், மற்ற காவல் துறையைச் சேர்ந்த 6 நபர்களிடம் தலா 25 ஆயிரம் பிடித்தம் செய்யப்பட வேண்டும். குறிப்பாக சோபியாவிற்கான இழப்பீடு ஒரு மாத காலத்திற்குள் வழங்கப்பட வேண்டும்” என்று நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.