தமிழகத்தில் கடந்த ஜனவரி 1 -ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மேற்கொண்டிருந்தது. குறிப்பாக, இறந்தவர்கள், இருப்பிடத்தில் இருந்து இடம் மாறியவர்கள், இரு இடங்களில் பெயர் பதிவு செய்தவர்கள் ஆகியோரை நீக்கும் பணிகளில் ஆணையம் தீவிரம் காட்டியது.

இறந்தவர்கள் குறித்து அவர்களது இறப்புச் சான்றிதழ் மூலமாகவும், இடம்மாறியவர்கள், இரு இடப் பதிவு போன்றவை கள ஆய்வு மற்றும் கணினி வழியாகவும் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டன.

போதிய ஆதாரங்களுடன் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. அந்த வகையில், தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் மொத்தம் 5 லட்சத்து 77 ஆயிரத்து 186 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

இதில், ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 439 இறந்து போன வாக்காளர்களின் பெயர்களும், 3 லட்சத்து 17 ஆயிரத்து 189 இடம்மாறிய வாக்காளர்கள், 75 ஆயிரத்து 558 இரு இடங்களில் பதிவு உள்ள வாக்காளர்களின் பெயர்கள் ஆகியவை அடங்கும்.

ஆகஸ்ட 31-ஆம் தேதி நிலவரப்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக அதிகமாக ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 42 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அவற்றில், இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 922. இடம்மாறியவர்கள் 66 ஆயிரத்து 749. இரு இடங்களில் பதிவு செய்தவர்கள் 18 ஆயிரத்து 371 பேர் ஆகும்.

இதேபோன்று, பெரம்பலூர் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக 161 வாக்காளர்களின் பெயர்கள் மட்டுமே நீக்கப்பட்டுள்ளன. அதில், இறந்தவர்கள் 12 பேரும், இடம் மாறியவர்கள் 118 பேரும், இரு இடங்களில் பதிவு செய்தோர் 31 பேரும் அடக்கம்.

இதர மாவட்டங்களில் சராசரியாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலை முழுமையாகச் சரி செய்யும் இந்தப் பணியில், வாக்காளர்கள் யாருடைய பெயர்களாவது தேவையில்லாமல் நீக்கப்பட்டிருந்தால், அவர்கள் சுருக்க முறைத் திருத்தத்தைப் பயன்படுத்தி பெயர்களைச் சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பணிகள் செப்டம்பர், அக்டோபர் ஆகிய இந்த இரண்டு மாதங்கள் மேற்கொள்ளப்படும்.

எனவே, தமிழகத்தில் கடந்த 1 -ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை வாக்காளர்கள் சரிபார்த்து தங்களது பெயர் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.