சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
 
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டத்தில் இருந்து வருகை தந்துள்ள அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
 
8 வழிச்சாலைக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது, விளை நிலங்களில் மின் கோபுரம் அமைக்கக்கூடாது,
கச்சா எண்ணெய், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு நிலங்களை கையகப்படுத்த கூடாது,
நெய்வேலியில் 3வது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களையும், கிராமங்களையும் கையகப்படுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடக்கூடாது
 
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையை பயன்படுத்தி விவசாயிகளை அச்சுறுத்தி பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை மத்திய, மாநில அரசுகள் கையகப்படுத்தி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
மேலும் கேபிள் அமைக்க வாய்ப்புகள் இருந்தும் விவசாய நிலங்களை கையகப்படுத்தி மின் கோபுரம் அமைக்க தமிழக அரசு முயற்சி செய்வதாக அவர் கூறினர்.
 
17-18ம் ஆண்டுக்கான பயிர்காப்பீட்டு தொகை, கரும்பு நிலுவை தொகையை தமிழக அரசு இதுவரை வழங்கவில்லை என்றும், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.
 
டெல்டா விவசாய பகுதிகளை பாலைவனமாக்க மாற்ற தமிழக அரசு முயற்சித்து வருவதாக அய்யாக்கண்ணு குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வரும் தேர்தலில் விவசாயிகளுக்கு லாபகரமான விலையும், கடன் தள்ளுபடியும் செய்யும் கட்சிகளுக்கே வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
 
மேலும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.