தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் வருகிற மார்ச் 10-ஆம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

2005-ல் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் ஆர்யா அறிமுகமானார். தொடர்ந்து பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, இரண்டாம் உலகம், ராஜா ராணி, கடம்பன், கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யாக்கு மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடக்கவில்லை. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார்.

சாயி‌ஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், கஜினிகாந்த் படத்தின் மூலம் சினிமாவில் தன்னுடன் ஜோடி சேர்ந்த சாயிஷாவை வாழ்க்கை துணையாக தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்யாவுக்கும், சாயி‌ஷாவுக்கும் வருகிற மார்ச் மாதம் 10-ந் தேதி ஐதராபாத்தில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்லாமிய முறைப்படி நடைபெறும் இவர்களது திருமணம் மார்ச் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் 2 நாட்கள் நடைபெறும் எனக் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து முறையான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.