மெட்ராஸ் மருத்துவப் பதிவுச் சட்டம், 1914ஐ முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் எனக் கூறி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கான தேர்தலை 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

ஜனநாயக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன், மெட்ராஸ் மருத்துவப் பதிவுச் சட்டம், 1914 விதிமுறைகளை மாற்றியமைத்து பின்னர் தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், காலாவதியான விதிமுறைகளுடன், வாக்காளர்களை புதுப்பிக்காமல், தேர்தல் நடத்த முயற்சிக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டினார்.

மேலும் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் கூட பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்றும், தேர்தலை நடத்தும் பதிவாளர் நியமனத்திலும் முறைகேடு நடந்துள்ளதாகவும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

அரசின் சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சுண்முகசுந்தரம், பிரச்னைக்குரிய சட்டம் மற்றும் விதிகளில் தேவையான மாற்றங்களைச் செய்வதற்கு கால அவகாசம் கோரினார்.

டி.என்.எம்.சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வாக்குப்பதிவு பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும், வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.

அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர் சுப்பிரமணியன், டி.என்.எம்.சி.யை நிர்வகிக்கும் தொன்மையான விதிகள் கொண்ட மெட்ராஸ் மருத்துவப் பதிவுச் சட்டத்தை முழுமையாக மறுசீரமைக்க வேண்டும் என்று தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மெட்ராஸ் மருத்துவப் பதிவுச் சட்டம், 1914 மற்றும் இணைக்கப்பட்ட விதிகளை 3 மாதங்களில் முழுமையாக மறுசீரமைக்கவும், மின்னணு அல்லது ஆன்லைன் வாக்களிப்பு முறையை இணைத்து தேர்தல் செயல்முறையை புதுப்பிக்கவும் அவர் தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

மேலும், இந்த நடைமுறைகள் முடிந்து புதிய கவுன்சில் பொறுப்பேற்கும் வரை மாற்று நிர்வாக ஏற்பாடுகளை மாநில அரசு செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.