உயர்கல்வி நிறுவனங்களில் சேர அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதற்காக 6 முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்துப் பட்டப் படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று இரண்டாவது நிதிநிலை அறிக்கையை (2022 – 2023) நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் திருக்குறளை மேற்கோள் காட்டி தாக்கல் செய்தார்.

2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள்: கடந்த இரண்டு ஆண்டுகள் பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் ‘இல்லம் தேடிக் கல்வி’ என்ற சிறப்பான முன்னோடிக் கல்வித் திட்டம் 38 மாவட்டங்களில் 1.8 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் நமது நாட்டிற்கே ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது. இதன் வாயிலாக 30 இலட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்றால் பெருமளவில் கல்வி கற்றலில் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இத்திட்டம் வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

கல்லூரிகளுக்கு ரூ.1000 கோடி செலவில் சிறப்புத் திட்டம். உயர்கல்வி நிறுவனங்களில் சேர அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிப்போம். அதற்காக 6 முதல் 12 வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்துப் பட்டப் படிப்பில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும்.

மேலும் இலவச சைக்கிள் திட்டத்திற்கு ரூ.162 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்வதை ஊக்குவிக்கும் விதமாக, இளநிலை படிப்புகளுக்கான முழு செலவை அரசே ஏற்கும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு மற்றும் உயர்கல்வித் துறைக்கு ரூ.5,668.89 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்கள், புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் STEAM – அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து, கல்வி பெற உதவும் நோக்கோடு, கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில் முன்மாதிரிப் பள்ளிகளை இந்த அரசு தொடங்கியுள்ளது. வரும் நிதியாண்டில்,மேலும் 15 மாவட்டங்களில் இத்தகைய முன்மாதிரிப்பள்ளிகள் (Model Schools) தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளை (ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உட்பட) நவீனமயமாக்குவதற்கான ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், அரசுப் பள்ளிகளில், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.

மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் (smart classrooms), இதரப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்களும் உருவாக்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இத்திட்டங்கள் படிப்படியாக 7,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் 1,300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மாநிலத்தில் இயங்கி வரும் பொது நூலகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து, மேம்படுத்தத் தேவையான ஆலோசனைகள் வழங்க ஓர் உயர்மட்டக் குழுவை அரசு அமைத்துள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உயர்தர வசதிகளுடன்கூடிய மாவட்ட மத்திய நூலகங்கள் அரசால் ஏற்படுத்தப்படும். இந்நூலகக் கட்டடங்களுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும்.

சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல, சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும்.

இத்துடன் இலக்கியச் செழுமை மிக்க தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும். புத்தகக்காட்சிகள் மற்றும் இலக்கியத் திருவிழாக்கள் வரும் ஆண்டில் 5.6 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும். இம்மதிப்பீடுகளில் மொத்தமாக பள்ளிக்கல்வித் துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.