ஜம்மு காஷ்மீரில் மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் புது வருட பிறப்பினை முன்னிட்டு வழிபட சென்ற பக்தர்கள் 12 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஜம்மு காஷ்மீரின் கத்ரா நகரில் புகழ்பெற்ற மாதா வைஷ்ணவ தேவி கோயில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பக்தர்கள் அதிக அளவில் வந்து தேவி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். ஆங்கில புது வருட பிறப்பினை முன்னிட்டு நேற்று நள்ளிரவு மாதா வைஷ்ணவ தேவி கோயிலில் பக்தர்கள் அதிக அளவில் கூடியுள்ளனர்.

இதனால், மக்கள் ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு முன்னேறி சென்றதில், திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் டெல்லி, ஹரியானா, பஞ்சாப், மற்றும் ஜம்முவில் இருந்து வந்த பக்தர்கள் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, உள்துறை முதன்மைச் செயலாளர், ஜம்மு மண்டல ஏடிஜிபி மற்றும் ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரியம் ஆணையர் தலைமையில் 3 பேர் கொண்ட குழு அமைத்து உயர்மட்ட விசாரணைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தேவி கோயில் கூட்ட நெரிச‌லில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒன்றிய அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 2 லட்சமும், நெரிச‌லில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரமும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் செய்தியில், காஷ்மீரில் மாதா வைஷ்ணவ தேவி பவனில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.