ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனவால் உயிரிழந்த செவிலியரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னிலையில் இருந்து போராடும் மருத்துவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக உள்ளது. குறிப்பாக, கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களே பலர் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகம் தான் கொரோனாவால் மருத்துவர்கள் உயிரிழப்பில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அளவில் கொரோனாவுக்கு 175 மருத்துவர்கள் பலியாகி உள்ள நிலையில், அதிகபட்சமாக தமிழகத்தில் 43 பேர் உயிர் இழந்துள்ளனர் என இந்திய மருத்துவர்கள் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர் அர்ச்சனா. இவர் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றிய நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

கடந்த ஞாயிற்று கிழமை (ஆகஸ்ட் 02) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த அரச்சானாவின் உடலை மருத்துவமுறைபடி, பாதுகாப்பு ஏற்பாடுடன் அடக்கம் செய்ய நவல்பூரில் உள்ள கல்லறை தோட்டத்திற்கு எடுத்து வரப்பட்ட போது, அப்பகுதி மக்கள் உடலை அடக்கம் செய்யவிடாமல் சுகாதார பணியாளர்கள் மற்றும் உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். தோண்டப்பட்ட குழி அருகே உறவினர்கள் சுமார் 2 மணிநேரம் சடலத்துடன் காத்திருந்தனர்.

பின்னர் அதிகாரிகள், காவல்துறையினர் ஊர் மக்களிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட பின்பு உடல் புதைக்கப்பட்டது. கொரோனா அச்சத்தால் மக்களிடையே மனித நேயம் குறைந்து வருவது வேதனையை ஏற்படுத்துவதாக சக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிறப்பான மருத்துவ கட்டமைப்பை கொண்டுள்ள தமிழகத்தில் மருத்துவர்களுக்கு அதிகம் நோய்த் தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களை அதிமுக பழனிசாமி அரசு உரிய பாதுகாப்பு கொடுக்கத் தவறுகிறது என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது.

மேலும் வாசிக்க: தமிழகத்தில் முதல் முறையாக 109 பேர் கொரோனா பலி; அரசு மருத்துவமனைகளில் மட்டும் 86 பேர்