லக்னோவுக்குச் சென்ற பிரதமர் மோடி, கார் ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை சந்திக்காதது ஏன் என ராகுல் காந்தி கண்டனக் குரல் எழுப்பியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது பாஜக ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் ஏற்றியதில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உட்பட 9 உயிரிழந்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

இதனையடுத்து இறந்த விவசாயிகளின் குடும்பங்களைச் சந்திப்பதற்காகச் சென்ற காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை, உத்தரப் பிரதேச காவல்துறையினர் தடுத்து நிறுத்தி 30 மணி நேரத்திற்கும் மேலாக தடுப்புக் காவலில் வைத்தனர்.

மேலும் லக்கிம்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வலியுறுத்திய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களை சந்திக்க லக்கிம்பூர் செல்ல இருந்தார். அவரையும் உ.பி காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வீட்டுக்காவலில் வைத்தனர்.

அதேபோல் லக்கிம்பூர் செல்ல முயன்ற சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் லக்னோ விமான நிலைய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனையடுத்து விமான நிலையத்திலேயே அவர் தர்ணாவில் ஈடுபட்டார்.

பஞ்சாப் துணை முதல்வர் சுக்ஜிந்தர் உள்ளிட்டோருக்கும் லக்னோ விமான நிலையத்தில் தரையிறங்க தடை விதிக்கப்பட்டது. மேலும், லக்கிம்பூர் கேரி மாவட்டத்துக்கு வெளியாட்கள் யாரும் வரக்கூடாது என 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இருப்பினும் தடையை மீறி லக்கிம்பூர் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க உள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அறிவித்தார். இதற்கிடையே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உடன் 3 பேருக்கு உத்தரப் பிரதேச அரசு அனுமதி அளித்தது. தொடர்ந்து அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் ஆகியோருடன் லக்னோ விமான நிலையம் வந்த ராகுல் காந்திக்கு அவரது வாகனத்தில் லக்கிம்பூர் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

லக்னோ விமான நிலையத்திலிருந்து காவல்துறை வாகனத்தில் மட்டுமே செல்லமுடியும் என்று உத்தரப் பிரதேச காவல்துறையினர் கூறியதால், ‘எனக்கு நீங்கள் ஏன் வாகனம் ஏற்பாடு செய்து தர வேண்டும்; எனது காரில் தான் செல்வேன்’ என ராகுல் காந்தி கூறினார்.

இதற்கு அனுமதி மறுத்த உ.பி காவல்துறையினர், அவரை வெளியே செல்லவிடாமல் தடுத்ததால் ராகுல் காந்தி விமான நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் போராட்டத்திற்கு பிறகு அவர்கள் சொந்த வாகனங்களில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, “விவசாயிகளின் உரிமைகள் திட்டமிட்டுக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. லக்னோவுக்கு சென்ற பிரதமர் மோடி லக்கிம்பூர் கெரி பகுதிக்குச் சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்காதது ஏன்?. இது விவசாயிகள் மீதான திட்டமிட்ட தாக்குதல். விவசாயிகள் ஜீப் ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளனர்.

லக்கிம்பூர் கெரிக்கு வந்த ஒன்றிய அமைச்சர் ஒருவரும், அவரின் மகனும் வந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது ஊடகங்களின் பொறுப்பு. ஆனால், நாங்கள் கேள்வி எழுப்பினால், இந்த விவகாரத்தைப் பேசினால், நாங்கள் அரசியல் செய்கிறோம் என ஊடகங்கள் பேசுகின்றன.

நாங்கள் ஜனநாயக முறையைப் பராமரிக்க முயல்கிறோம். இந்த தேசத்துக்கு நம்பிக்கையூட்டப் போகிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தார், விவசாயிகள் நம்பிக்கை இழந்துள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கையளிக்கப் போகிறோம்” எனக் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.