குஜராத்தில் உள்ள மோர்பி கேபிள் பாலம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 நாளில் அறுந்து விழுந்து இதுவரை 40 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றின் மீது ஏறக்குறைய நூற்றாண்டு பழமையான தொங்கு பாலம் உள்ளது. இந்த ஆற்றின் ஆற்றின் குறுக்காக மக்கள் பயன்பாட்டுக்காக இந்த கேபிள் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள பிரபலமான பாலங்களில் இதுவும் ஒன்றாகும்.

சமீபத்தில் இந்த பாலம் பழுதடைந்ததை அடுத்து, பாலம் புரனமைப்பு பணி துவங்கி நடைபெற்று வந்தது. இந்த புனரமைப்பு பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வந்த நிலையில், 4 நாட்களுக்கு முன்பு கடந்த 26.10.2022 அன்று இந்த பாலம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (30.10.2022) சாத் பூஜையில் கலந்துக் கொள்வதற்காக ஏராளமான மக்கள் தொங்கு பாலம் மீது நடந்து சென்றுள்ளனர். சிலர் பாலத்தில் நின்றபடி ஆற்றிலும் ஓடும் தண்ணீரை ரசித்து கொண்டிருந்தனர்.

இந்த பாலத்தின் மீது சுமார் 400 பேர் இருந்துள்ளனர். அப்போது திடீரென்று கேபிள் பாலம் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பாலத்தின் ஒரு பகுதி தண்ணீருக்குள் மூழ்கி, ஆற்று தண்ணீரில் பலர் மூழ்கினர். இதில் பலர் நீச்சலடித்து வெளியே வந்தனர். இன்னும் சிலர் அறுந்து தொங்கிய பாலத்தின்பகுதியில் தொங்கிய நிலையில் உயிருக்கு போராடினார்கள்.

இதுகுறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து மாநில பேரிடர் மீட்பு படையினரும், தேசிய மீட்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 40 பேர் பரிதமாக உயிரிழந்துள்ளனர்.

கடந்த 7 மாதங்களாக புனரமைப்பு பணியை மேற்கொண்டு வந்த தனியார் நிறுவனம், பணிகள் நிறைவடைந்து பாலம் உறுதியாக உள்ளதென குஜராத் அரசிடம் உறுதி சான்று மற்றும் அனுமதி வாங்காமல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்ட பாலம் பாரம் தாங்காமல் அறுந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

புனரமைப்பு பணிக்கு பிறகு கேபிள் பாலம் திறக்கப்பட்ட வெறும் 4 நாட்களிலேயே இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பாலம் புனரமைப்பு பணி சரியாக மேற்கொள்ளப்படவில்லை. அலட்சியமாக செய்யப்பட்ட பணி, அவசர கதியில் மீண்டும் பாலம் திறக்கப்பட்டதே விபத்துக்கான காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் மோர்பியில் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி அறிவித்துள்ளார். மீட்பு பணிகளை துரிதப்படுத்த குஜராத் அரசுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிதி வழங்கப்படும் என்று குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது.