பிரதமர் மோடியை தொடர்ந்து ரஜினி பங்கேற்கும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சி கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடைபெற்று வருகிறது.

அரசியல் தற்போதெல்லாம் தலைவர்களின் இமேஜை நம்பி மட்டும்தான் இருக்கிறது. உலகம் முழுக்க அரசியல் தலைவர்கள் தங்களுக்கு என்று இமேஜை உருவாக்கிக் கொள்வதில் கவனமாக இருக்கிறார்கள்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை தேர்தலில் நிற்கும் முன் ஒபாமா, முதன் முதலில் மேன் Vs வைல்ட் ஷோவில் கலந்து கொண்டனர். உலகம் முழுதும் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான, மேன் Vs வைல்டு நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பேச வேண்டிய கருத்துக்களை ஒபாமா கூறினார்.

நானும் உங்களை போன்ற ஆள்தான், எனக்கு பகுட்டு கிடையாது. நான் எளிமையான மனிதன் என்று ஒபாமா தன்னை காட்டிக்கொண்டார். ஒரு கறுப்பின இளைஞராக தான் எதிர்கொண்ட அழுத்தங்களை பேசினார். அதேபோல் அந்த நிகழ்ச்சியில் பியர் கிறில்ஸ் சாப்பிட்ட பாம்பு, தவளைகளை கூட, ஒபாமா ஒன்றாக சாப்பிட்டார். கிறில்ஸ் உடன் சேர்ந்து மலையும் ஏறினார். இந்த நிகழ்ச்சி மூலம் மக்கள் இடையே ஒபாமா பெரிய வரவேற்ப்பை பெற்றார்.

அதேபோல்தான் கிறில்ஸ் உடன் சேர்ந்து இந்தியாவில் பிரதமர் மோடி மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியை சூட் செய்தார். இதில் பியர் கிறில்ஸ் உடன் மோடி பேசியதும், அவர் நடந்து கொண்ட விதமும் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றது. இந்நிகழ்ச்சி முழுக்க மோடி ஹிந்தியில் மட்டுமே பேசினார். ஆனால் பியர் கிறில்ஸ் ஹிந்தியில் நமஸ்தே என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் பேச தெரியாத நபர். அவர் ஆங்கிலத்தில் பேச, மோடி இந்தியில் பதில் சொல்ல.. அந்த நிகழ்ச்சியே ஒரே ஆரவாரமாக இருந்தது.

அந்த நிகழ்ச்சியில் பிரதமர் உடன் எப்போதும் இருக்கும் பாதுகாப்பு வீரர்கள் கேமராவுக்கு பின் இருந்தனர். அதேபோல் மோடி என்ன பேச வேண்டும் என்பதற்கான வசனகர்த்தாக்களும் உடன் இருந்தனர். மேலும் மோடிக்கு நிகழ்ச்சியின் போது உணவு சமைத்து தரவும் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேர் கிறில்ஸ் மோடி இருவரும் ஈவ்னிங் வாக் சென்றது போல நிகழ்ச்சி பாதுகாப்போடு உருவாக்கப்பட்டிருந்தது.

ஒபாமா, மோடியை போல தன்னுடைய இமேஜை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ரஜினி இதை கையில் எடுத்துள்ளார்.

இக்கட்டான சூழ்நிலைகளில் உயிர் பிழைத்திருப்பதற்கான வழிமுறைகளைச் சொல்லும் நிகழ்ச்சியான மேன் Vs வைல்டு நிகழ்ச்சி, இம்முறை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடைபெற்று வருகிறது.

பேர் கிரில்ஸின் இந்நிகழ்ச்சியில் ரஜினி 2 நாட்கள் கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பிற்காக பந்திபுரா புலிகள் காப்பகம் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

சமீபகால பேட்டிகளால் ரஜினியின் இமேஜ் பெரிய அளவில் சரிந்தது. முக்கியமாக பெரியார் பற்றி பேசி ரஜினி தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்கினார். இதை மீட்டு எடுக்க இந்நிகழ்ச்சி பெரிய அளவில் உதவும் என்கிறார்கள். ஆன்மீக அரசியல் குறித்து பேசும் ரஜினி, அதே பாஜக ஸ்டைலில் இமேஜ் அரசியலை கையில் எடுத்துள்ளார். இது எந்த அளவிற்கு அவருக்கு உதவும் என்று சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் ரஜினி இன்று படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தபோது தோல் பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து படப்பிடிப்பு நடக்காது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.