கல்வி சமூகம்

ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்க முடியாது – மத்திய அரசு திட்டவட்டம்

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு வழங்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப் படிப்புகளில் இருந்து 15% இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீடு என்ற வகையில் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது. இதேபோல், மற்ற மாநிலங்களும் வழங்குகின்றன.

இந்நிலையில், இந்த இடங்களில் 50% ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடாக வழங்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த சென்னை உயர் நீதிமன்றம், மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கும்படி உத்தரவிட்டது. மேலும், இது பற்றிய சட்ட வரையறைகளை 3 மாதங்களில் உருவாக்கும்படியும், அதற்காக சிறப்பு குழுவை அமைக்கும்படியும் உத்தரவிட்டது.

இந்நிலையில் மருத்துவ மேற்படிப்புகளில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50% இட ஒதுக்கீடு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 13ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மருத்துவப் படிப்பில் நடப்பாண்டில் ஓபிசி பிரிவினருக்கு 50% இடஒதுக்கீடு வழங்க முடியுமா? அல்லது இது குறித்த ஆலோசனை இன்னும் முடியாததால் 27 சதவிகிதமாவது கொடுக்க முடியுமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தி, அக்டோபர்.16ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசுகக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று (அக்டோபர்.15) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, 50% அல்லது 27% என எந்த இட ஒதுக்கீடும் இந்த ஆண்டே கொடுக்க முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஓபிசி இடஒதுக்கீடு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் நடப்பாண்டில் இடஒதுக்கீடு இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் நாளை (அக்டோபர்.16) வெளியாவதால் இட ஒதுக்கீடு வழங்கும்பட்சத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் மத்திய அரசு கூறியது. மத்திய அரசின் இந்த முடிவு மனுதாரர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் வாசிக்க: துணைவேந்தர் சூரப்பா கடிதம் சர்ச்சை: ‘அண்ணா பல்கலைக்கழகத்தை காப்போம்’ என திமுக போர்க்கொடி

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.