அரசியல் கேளிக்கை கொரானா சமூகம் தேசியம் மருத்துவம்

உண்மையில் நீங்கள் கொரோனா வைரசின் கூட்டாளி: அமைச்சரை விமர்சித்த நடிகர் சித்தார்த்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு எழுதிய பதில் கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அமைச்சர் ஹர்ஷ் வர்தனை கடுமையாக விமர்சித்துள்ளார் நடிகர் சித்தார்த்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சமீபத்தில் பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி குறித்து எழுதிய கடிதத்தில் ஐந்து அம்ச யோசனைகளை முன்வைத்து நிறைவேற்ற வேண்டுமென்று கோரினார். அதில், தடுப்பூசி தட்டுப்பாடின்றி அனைவருக்கும் கிடைக்க வேண்டும். 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தார்.

தடுப்பூசி விநியோகம் தொடர்பான முன்னாள் பிரதமர் மன்மோகங் சிங்கின் கோரிக்கைகளில் சிலவற்றை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியிருக்கிறது. இது மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மன்மோகன் சிங்குக்கு எழுதிய பதில் கடிதத்தில், “கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து நீங்கள் கூறியுள்ள ஆலோசனைகள் அனைத்தும் உங்கள் கட்சியினருக்கும் பொருந்தும் தானே? அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வேண்டும் என்பதற்காக மத்திய அரசு போராடிக் கொண்டிருக்கும் வேளையில், உங்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், மாநில முதல்வர்கள் எனப் பலர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதோடு மட்டுமில்லாமல் சந்தேகத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இத்தகைய அசாதாரண சூழலில் நீங்கள் கூறும் ஆரோக்கியமான ஒத்துழைப்பு என்பது உங்கள் கட்சியினருக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். இந்தியாவின் தடுப்பூசி விநியோகம், தயாரிப்பு உள்ளிட்டவற்றைப் பற்றி நீங்களும், இந்த கடிதத்தைத் தயாரித்தவரும் முழுமையாக அறிந்துகொள்ளவில்லை என்று நினைக்கிறேன்.

நாட்டு மக்களின் நலனில் துளியும் அக்கறை இல்லாமல் மத்திய அரசின் செயல்பாடுகளை எதிர்த்து உங்கள் கட்சியினர் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். நீங்கள் முதலில் உங்கள் கட்சியினருக்கு நிலையைத் தெளிவுபடுத்துங்கள். திறந்த கடிதம் கூட எழுத வேண்டாம். தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு நீங்கள் அறிவுரை கூறலாம். நீங்கள் கூறியிருக்கும் ஆலோசனைகள் அனைத்தையும் மத்திய அரசு எப்போதோ செயல்படுத்திவிட்டது என்பது உங்களுக்குத் தெரியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

உங்கள் கடிதத்தில் பல பொய் தகவல்கள் இருப்பினும், உங்கள் நல்ல நோக்கத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. எங்களிடம் நீங்கள் கூறியுள்ள ஆலோசனைகளும், அறிவுரைகளையும் உங்கள் கட்சியினருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று நான் உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று காங்கிரஸ் கட்சியினரைக் குற்றம்சாட்டி பதிலளித்திருந்தார் அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.

இது தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில், “நீங்கள் கொரோனா போராளி இல்லை ஹர்ஷ் வர்தன். உண்மையில் நீங்கள் கொரோனா வைரசின் கூட்டாளி. தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்று விட வேண்டும் என்பதற்காக நீங்கள் என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்க துணிந்து நாட்டு மக்களைக் கொலை செய்கிறீர்கள்.

இந்த நேரத்திலும் கூட மத கூட்டங்களிலும், விழாக்களிலும் மக்களைத் திரளச் செய்து அவர்களையும் கொல்கிறீர்கள். வரலாறு இதை ஒருபோதும் மன்னிக்காது” என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனை டேக் செய்து விமர்சித்துள்ளார்.

ஊரடங்கு அச்சத்தால் சொந்த ஊர் பயணம்; நிரம்பி வழியும் ரயில் நிலையங்கள்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.