அல்-காதர் அறக்கட்டளை ஊழல் வழக்கில் கைதான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தார். அப்போது அவரை துணை ராணுவப் படையினர் கைது செய்தனர். அவர்கள் இம்ரான் கானை மூர்க்கமாக இழுத்துச் சென்று காரில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

அல்-காதர் அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இம்ரான் கான் கைது சம்பவம்,பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது தெஹ்ரிக்-இ- இன்சாப் கட்சி சார்பில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இம்ரான் கான் கைது சட்டத்துக்குப் புறம்பானது என்றும் அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். மேலும், இன்று (12.05.2023) இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் ஆஜராக வேண்டும் என்றும், இஸ்லாமாபாத் நீதிமன்றம் உச்ச நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

மேலும், இம்ரான் கான் பாதுகாப்பை இஸ்லாமாபாத் காவல்துறை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். இந்நிலையில் இன்று இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இம்ரான் கானுக்கு 2 வாரம் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.