மாநிலத்தில் ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதற்கு அரசியல் தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

யூனியன் பிரதேசமான டெல்லியின் சட்டம்-ஒழுங்கு ஒன்றிய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லியில் தற்போது முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிர்வாகம் தொடர்பாக அரசுக்கும், டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வந்தன.

மாநில அரசின் செயல்பாடுகளில் ஆளுநர் தலையிடுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்ற விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதில் மாநில அரசு, துணைநிலை ஆளுநர் என இருவரில் யாருக்கு அதிகாரம் உள்ளது எனக் கேள்வி எழுந்தது.

இது தொடர்பாக 2015 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 2016-ல் ஆளுநருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

2019-ல் இரு நீதிபதிகள் அமர்வு, இவ்வழக்கில் மாறுபட்டத் தீர்ப்பை வழங்கியது. ஒரு நீதிபதி அரசுக்கு ஆதரவாகவும், மற்றொரு நீதிபதி துணைநிலை ஆளுநருக்கு ஆதரவாகவும் தீர்ப்பளித்தனர். இதனையடுத்து, இந்த வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டது.

பின்னர் ஒன்றிய அரசின் வேண்டுகோளை ஏற்று, கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதன்படி, தலைமை நீதிபதி சந்திர சூட், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹிமா கோலி, நரசிம்மா அமர்வு வழக்கை விசாரித்தது.

இதற்கிடையில், 2021-ல் “தேசிய தலைநகர் பிரதேச டெல்லி அரசு திருத்தச் சட்டம்” நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத் திருத்தத்தின்படி, டெல்லி அரசு எந்த முடிவு எடுத்தாலும், துணை நிலை ஆளுநரின் கருத்தைக் கேட்டறிவது கட்டாயமாக்கப்பட்டது. இதன் பிறகு அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கும்கூட, துணைநிலை ஆளுநரின் அனுமதியைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று (11.05.2023) அதிரடி தீர்ப்பு வழங்கியது. அதில், “இதர யூனியன் பிரதேசங்களுக்கும், டெல்லிக்கும் வித்தியாசம் இருக்கிறது. டெல்லிக்கு மாநில அந்தஸ்து இல்லாமல் இருக்கலாம். ஆனால், சட்டம் இயற்றும் அதிகாரம் இருக்கிறது.

ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் மட்டுமே அதிகாரம் இருக்க வேண்டும். பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் உள்ளிட்ட விவகாரங்களைத் தவிர்த்து, இதர அனைத்து அதிகாரங்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசுக்கே உள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகள், அவரவர் துறை சார்ந்த அமைச்சர்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.

டெல்லி துணைநிலை ஆளுநரைவிட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே முழு அதிகாரமும் உள்ளது. டெல்லி அரசின் அறிவுரைப்படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறும்போது, “கடந்த 8 ஆண்டுகளாக டெல்லி அரசின் திட்டங்கள் தடுக்கப்பட்டன. எனது கைகள் கட்டப்பட்டு இருந்தன. அனைத்து எதிர்ப்புகள், தடைகளைத் தாண்டி மக்களுக்கு சேவையாற்றி வந்தோம்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் எங்களுக்கு முழு அதிகாரம் கிடைத்திருக்கிறது. இனிமேல் 10 மடங்கு வேகத்தில் நலத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும். தகுதி, திறமையின் அடிப்படையில் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள், இடமாற்றம் செய்யப்படு வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.