கடைகளில் சென்று வாங்கிவதைவிட பல மடங்கு குறைவான விலையில் கிடைப்பதால் ஏராளமானவர்கள் ஆன்லைன் மூலம் பட்டாசு வகைகளுக்கு ஆர்டர் செய்து வருகின்றனர். இதற்கென புதுப்புது ஆன்லைன் நிறுவனங்கள் பெருகி வருவதாக சிவகாசியில் இருந்து கொள்முதல் செய்து பிறபகுதிகளுக்கு கொண்டுவந்து கடைகளில் வைத்து விற்பனை செய்யும் சிறு வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்திய பட்டாசு உற்பத்தியை பாதிக்கும்வகையில் ஆன்லைன் மூலம் தடை விதிக்கப்பட்ட சீனப் பட்டாசுகள் புழங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக, பட்டாசு வியாபாரம் செய்ய கடை திறக்க வேண்டுமானால், வெடிப்பொருட்கள் விற்பனை சட்டத்தின்படி பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். தீபிடிக்காத கூரை, கதவுகள் மற்றும் மின்சார கசிவுகள் இல்லாத கட்டிடம் என பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்த பின்னர்தான் பட்டாசு கடை வைக்க தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் லைசென்ஸ் அளிக்க வேண்டும் என்பது பட்டாசு விற்பனைக்கான நடைமுறையாக இருந்து வருகிறது.

ஆனால், இதுபோன்ற எவ்வித நடைமுறைகளையும் கடைபிடிக்காமல் விதிமீறலாக ஆன்லைன் மூலம் நடைபெற்றுவரும் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என ஷேக் தாவூத் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பதற்கு தடை விதித்து, மறுவிசாரணையை நவம்பர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.