தாம்ஸன் ராய்டர்ஸ் பவுண்டேஷன் எனும் அமைப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு குறித்து சர்வதேச அளவில் 550 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இந்தக் கருத்துக்கணிப்பானது தொலைபேசி வாயிலாகவும், ஆன்லைன் மூலமும் கடந்த மார்ச் 26 முதல் மே 4-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் நடத்தப்பட்டது.
இதில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடப்பதால், உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது என்ற அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா, தெற்கு ஆசியா, பசிபிக் பகுதி நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ஆய்வில் பங்கேற்று தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தனர்.
இந்தக் கருத்துக்கணிப்பின் முடிவுகளை தாம்ஸன் ராய்டர்ஸ் பவுண்டேஷன் நிறுவனம் செவ்வாயன்று வெளியிட்டுள்ளது. அதில் உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பற்ற, ஆபத்தான நாடு இந்தியா என்பது தெரியவந்துள்ளது. இதில் முதல் 10 இடங்களில் 9 இடங்களில் ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகள் இடம்பிடித்துள்ளது. ஒரே ஒரு மேற்கத்திய நாடாக அமெரிக்கா இடம் பெற்றுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தொடரும் வன்முறை, பாலியல் பலாத்காரம், வீட்டுவேலைக்காகக் கடத்துதல், கொத்தடிமையாக நடத்துதல், கட்டாயத் திருமணம், பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்துதல் போன்ற காரணிகளில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
அத்துடன் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு ரீதியாகவும் இந்தியப் பெண்கள் மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகிறார்கள். உச்ச கட்டமாக பெண்கள் மீது ஆசிட் வீச்சு, உடல் உறுப்புகளை சிதைத்தல், குழந்தை திருமணம், மற்றும் உடல்ரீதியாகத் துன்புறுத்துதல் போன்றவைகளும் அதிகமாக நடப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட இதேபோன்றதொரு ஆய்வில் பெண்களுக்கு ஆபத்து மிகுந்த நாடுகள் என்ற பட்டியலில் 4-வது இடத்தில் இருந்த இந்தியா இப்போது அபாயகரமாக முதலாவது இடத்துக்குச் சென்றுள்ளது.
தற்போதைய பட்டியலில் ஆப்கானிஸ்தான் 2-வது இடத்திலும், சிரியா 3-வது இடத்திலும் உள்ளன.
தொடர்ந்து 4-வது இடத்தில் சோமாலியாவும், 5-வது இடத்தில் சவுதி அரேபியாவும் பெண்களுக்கு ஆபத்து மிகுந்த நாடாக இருக்கின்றன. முதல் 10 நாடுகளில் ஒரே ஒரு மேற்கத்திய நாடாக அமெரிக்கா மட்டும் 10-வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.
தொடர்பு செய்திகள் : உலகின் மகிழ்ச்சியான நாடு இந்தியா பின்னேற்றம் : ஐ.நா அறிக்கை