தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் கருப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக எம்.எல்.ஏ. கே.எஸ்.மூர்த்தி உள்ளிட்ட 293 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்த கைது நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடைப்பெற்றது. மு.க.ஸ்டாலின், ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், உள்ளிட்ட திமுகவினர் கருப்புக்கொடியுடன் பேரணியாகச் சென்று முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.
கைதான பின் மு.க.ஸ்டாலின் வெளிட்ட அறிக்கையில்,
"மாநில சுயாட்சிக்கு எதிராய் எத்தனை அடக்குமுறைகள் ஏவப்பட்டாலும் ஆளுநரின் அத்துமீறல்களை தொடர்ந்து கண்டிக்கும் தி.மு.கழகம், தனது அடிப்படை கொள்கையான மாநில சுயாட்சியை அடையும் வரை எவ்வித போராட்டத்திற்கும், தியாகத்திற்கும் தயாராக இருக்கும். இதனை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என்றும், தூய்மைபடுத்துகிறோம் என்று சொல்லிவிட்டு தூய்மையாக இருக்கக்கூடிய இடத்திலே போய் குப்பையை போட்டுவிட்டு அந்த குப்பையை அள்ளக்கூடிய வேலையைத்தான் இதுவரையிலே கவர்னர் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார் என்றும். நாட்டிலே முதலமைச்சராக, அமைச்சர்களாக ஆட்சியில் இருந்து கொண்டிருக்கும் இந்தக் குப்பைகளை அகற்றுவதற்கு இந்த கவர்னருக்கு யோக்கியதை இல்லை, அருகதை இல்லை என்றும் கூறியுள்ளார்.
தொடர் செய்திகள் : பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் ஸ்டாலின் ஆவேசம்