டெல்லி அரசில் பணியாற்றும் உயரதிகாரிகள் கடந்த 4 மாதங்களாகப் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உரிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தியும், கடந்த திங்கள்கிழமை முதல் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர்கள் சத்யேந்தர் ஜெயின், கோபால் ராய் உள்ளிட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது கோரிக்கைகள் மீது துணைநிலை ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் வரை அவரது மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறி, துணை நிலை ஆளுநர் மாளிகை வரவேற்பு அறை சோஃபாவிலேயே அவர்கள் காத்திருக்கின்றனர். இப்போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 7-ஆவது நாளாக தொடர்ந்தது.
கேஜரிவால் போராட்டத்திற்கு மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், கேரளா, கர்நாடகா மாநிலங்களின் முதல்வர்கள் நேற்று துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் சென்று தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் பாஜக அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்ததும் குறிப்பிடதக்கது...
இந்நிலையில், கேஜரிவாலின் உள்ளிருப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, தில்லி மண்டி ஹவுஸில் இருந்து லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லம் நோக்கி இன்று ஞாயிற்றுக்கிழமை தடையை மீறி மாபெரும் பேரணி நடத்தி வருகிறது ஆம் ஆத்மி கட்சி.
இந்நிலையில், டெல்லியில் முதல்வர் கேஜரிவால், துணைநிலை ஆளுநர் மாளிகையில் தர்ணா போராட்டம் நடத்தி வருவது தொடர்பாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர்.
அப்போது, ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டுகள் "தவறானது, அடிப்படையற்றது" என ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து செயலர் வர்ஜா ஜோஷி கூறுகையில், நாங்கள் எங்களது பணியை தொடர்ந்து செய்து வருகிறோம். நாங்கள் முற்றிலும் அரசியல் காரணங்களுக்காகவே குற்றம் சுமத்தப்படுவதாகவும், பழிவாங்கப்பட்டதாக உணர்கிறோம். எனது தனிப்பட்ட நற்பெயர் மற்றும் அதிகாரி என்ற முறையில், நற்பெயரை கெடுக்க வேண்டும் என அரசியல் கட்சி என் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்தி எல்லை மீறியுள்ளது. நாங்கள் எங்களது பணியை செய்யவே இங்கு இருக்கிறோம். தயவுசெய்து எங்களை அரசிலுக்காக பயன்படுத்த வேண்டாம் என்று ஜோஷி கூறினார்.
டெல்லியில் அரசு அதிகாரிகளை வேலைநிறுத்தத்தில் ஈடுபடவைத்து, டெல்லியில் அறிவிக்கப்படாத குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அரசு நடத்துவதாக முதல்வர் கேஜரிவால் நேற்று சனிக்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர் செய்திகள் : தினகரன் அணி விளாத்திகுளம் எம்எல்ஏ உமாமகேஸ்வரி தடாலடி