வழக்குத் தொடர்பான நோட்டீஸ்களை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பினாலும், அது செல்லும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற வழக்குத் தொடர்பாக வாட்ஸ் அப் மூலமாக அனுப்பப்படும் நோட்டீஸ் செய்திக்கு நீல நிற டிக் மார்க் வருவதே, நோட்டீஸ், சம்பந்தப்பட்டவருக்கு சென்று சேர்ந்ததற்கான ஆதாரம் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
எஸ்பிஐ கார்ட்ஸ் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த பரபரப்பு உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கில், ரோஹித் ஜாதவ் என்பவர் கடன் அட்டை பெற்று அதில் ஒரு லட்சத்துக்கும் மேல் கடன் நிலுவையில் வைத்திருந்தார். அவரது வீட்டு முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பிய வங்கி அதிகாரிகள், அவரது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ் அப் மூலமும் நோட்டீஸை பிடிஎஃப் வடிவில் அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பான வழக்கு நேற்று மும்பை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, நான் வீடு மாறிவிட்டதால் நோட்டீஸ் கிடைக்கவில்லை என்று ஜாதவ் கூற, வங்கி சார்பில் ஆஜரான வழக்குரைஞர், வாட்ஸ் அப்பில் அவருக்கு அனுப்பப்பட்ட தகவல்கள் சென்று சேர்ந்ததற்கான டிக் மார்க்குகளை சாட்சியமாகப் பதிவு செய்தார். அதோடு, அதனை திறந்து படித்ததற்கான ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டது.
இதைக் கேட்ட நீதிபதி, சட்டப்படி, வழக்கு தொடர்பான நோட்டீஸ் நேரிலோ தபாலிலோ அனுப்பப்படும். ஏற்கனவே, மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் நோட்டீஸ்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
எனவே, வாட்ஸ் அப் மூலம் லீகல் நோட்டிஸ் அனுப்புவதும் செல்லும் என்று மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர் செய்திகள் : அமெரிக்கா முடிவுக்கு சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை