உலகம் முழுவதுமே தண்ணீர் பிரச்சினை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவிலும் இது, அபாயகரமான அளவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. விவசாயம், தொழிற்சாலை, வர்த்தகம் என பிற தேவைகள் தவிர மனிதனின் அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. குடிநீருக்கே மக்கள் அல்லல் படும் சூழல் நிலவுகிறது.
தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரத்தை போலவே விரைவில் பெங்களூருவும் தண்ணீர் இல்லாத நகரமாக மாறப்போகிறது என ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.
பெங்களூரு மட்டுமின்றி 2020-ம் ஆண்டில் சென்னையிலும் நிலத்தடி நீர் வற்றிவிடும் எனவும் நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்துள்ளது.
இமயமலை சாரலில் உள்ள மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு கடுமையான தண்ணீர் பிரச்சினை தலையெடுத்துள்ளது. குறிப்பாக தலைநகர் சிம்லாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டு, குடிநீர் தேவைக்கு மட்டுமே தண்ணீர் வழங்கப்படுகிறது. மக்களின் அன்றாட பிறத் தேவைக்கு கூட அளவிட்டே தண்ணீர் தரப்படுகிறது.
இந்த நிலையில் நாடுமுழுவதும் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் தண்ணீர் பயன்பாடு தொடர்பாக நிதி ஆயோக் விரிவான ஆய்வு நடத்தி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
‘‘நாடுமுழுவதும் 60 கோடி மக்கள் தினந்தோறும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றனர். இந்தியாவில் பாதுகாப்பான நீர் கிடைக்கப் பெறாததால், 2 லட்சம் பேர் ஆண்டு தோறும் உயிரிழந்து வருகின்றனர். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு தண்ணீர் பிரச்சினை தலை தூக்கியுள்ளது.
மிகப்பெரிய பொருளாதார இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் நாட்டி ஜிடிபி என அழைக்கப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமும் 6% சதவீதம் அளவிற்கு சரியும்.
இந்தியாவில் நமது மக்களுக்கு வழங்கப்படும் தண்ணீரில் 70 சதவீதம் மிக மோசமாக மாசடைந்துள்ளது. 40 சதவீத தண்ணீர் பயன்படுத்த தகுதி இல்லாத நிலையில் உள்ளது. தண்ணீர் பிரச்சினையால் நாட்டின் உணவு தானிய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். இதனால் நாட்டில் அனைத்து மக்களுக்கும் உணவு வழங்குவதே கூட கேள்விக்குரியாகும் சூழல் உள்ளது.
பல மாநிலங்களில் குறிப்பிட்ட அளவு மழை பெய்துள்ள போதிலும் இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டதற்கு தண்ணீர் மேலாண்மை சரியாக இல்லாததே காரணம். குறிப்பாக குளம், குட்டை, வாய்க்கால், பாசன ஏரிகள் என எதையும் தூர் வாரி பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நீர் ஆதாரங்களை அழித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நீர் ஆதாரங்களை மாசுபடுத்தி இருக்கும் தண்ணீரை பயன்படுத்த முடியாத அளவிற்கு மோசமாக்கி விடுகின்றனர். அத்துடன், பொதுவான தண்ணீரை சரியான முறையில் அனைத்து மக்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய கட்டாயம் அரசுகளுக்கு உள்ளன. ஆனால் சரியான முறையில் இது செயல்படவில்லை’’ இவ்வாறு நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கூறுகையில் ‘‘இந்தியாவில் மிகப்பெரிய அளவில் தண்ணீர் பிரச்சினை எழுந்துள்ளது. ஆனால் இதன் முக்கியத்துவம் பலருக்கும் தெரியிவில்லை. இதை நிலை நீடித்தால் எதிர்காலத்தில் நாட்டின் சில பகுதிகள் மக்கள் வாழ்வதற்கு தகுதியில்லாத இடங்களாக மாறி விடும்’’ எனக் கூறினார்.
தொடர் செய்திகள் : காவிரி மேலாண்மை ஆணையம் : இறுதி முடிவை எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை