தமிழகத்துக்கு 192 டிஎம்சி நீர் வழங்க வேண்டும் என 2007-இல் காவிரி நடுவர் மன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மேல் முறையீடு செய்தன. 192 டிஎம்சி நீர் ஒதுக்கீடு செய்தது போதாது என தமிழகமும், தமிழகத்துக்கான காவிரி நீரை 132 டிஎம்சியாகக் குறைக்க வேண்டும் என கர்நாடகமும் மேல் முறையீடு செய்திருந்தன. இதையடுத்து, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரின் அளவு 192-லிருந்து 177.25 டிஎம்சியாகக் குறைக்கப்பட்டது.
கர்நாடகத்துக்கு 284 டிஎம்சி, கேரளத்துக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீர் வழங்க வேண்டும். இதைச் செயல்படுத்த 'ஸ்கீம்' என்று சொல்லப்படும் வரைவு செயல் திட்டத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. மேலும், வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.
இதற்கு இரண்டு முறை அவகாசம் கோரிய நிலையில், மத்திய நீர்வளத் துறை செயலர் யு.பி.சிங் கடந்த மே 14-ஆம் தேதி 14 பக்க வரைவு செயல் திட்ட அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் திருத்தங்கள் ஏதும் இருந்தால் தெரிவிக்கும்படி 4 மாநிலங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. பின்னர், மாற்றியமைக்கப்பட்ட வரைவு செயல் திட்ட அறிக்கையை மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வியாழக்கிழமை தாக்கல் செய்தது. இதையடுத்து, உத்தரவு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு வெள்ளிக்கிழமை அளித்த உத்தரவு: அணைகளில் உள்ள நீர் இருப்பு நிலை, திறந்துவிட வேண்டிய நீரின் அளவு ஆகிய விவரங்களை மாதந்தோறும் ஆணையத்துக்கு அளிக்க வேண்டும் என வரைவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக கர்நாடகம், கேரளம் தெரிவித்த யோசனைகள், ஆட்சேபனைகள் நிராகரிக்கப்படுகின்றன.
உச்ச நீதிமன்றம் மாற்றியமைத்துள்ள காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவை திறம்பட அமல்படுத்துவதால், மாநிலங்களின் உரிமைகள் பாதிக்கப்படாது. ஆகையால், எந்த நோக்கத்துக்காக செயல் திட்ட வரைவு உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை சட்டப்பூர்வமாக தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். ஏற்கெனவே தீர்வு காணப்பட்ட பிரச்னைகளை மாநிலங்கள் மீண்டும் முன்வைப்பதை அனுமதிக்க முடியாது.
மேலும், இந்த வழக்கு விசாரணையின் போது புதுச்சேரி அரசு சார்பில் ஆஜராகி ஏ.எஸ். நம்பியார் தெரிவித்த கருத்துகள் பாராட்டுக்குரியவை. அவர், 'காவிரி நீர் மேலாண்மை ஆணையம் வெறும் உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அமைப்பாக இருக்கக் கூடாது. மாறாக உச்ச நீதிமன்றம் அளித்த இறுதி தீர்ப்பை அமல்படுத்தும் வகையில் ஆணையம் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு மாநிலங்களை இணங்கச் செய்யும் வகையில் ஆணையம் இருக்க வேண்டும்' என்று தெரிவித்தது பாராட்டுக்குரியவை.
மாற்றியமைக்கப்பட்ட செயல் திட்ட வரைவை அமல்படுத்தும் வகையில் வரும் பருவமழைக் காலத்துக்கு முன்பாகவே அரசிதழில் மத்திய அரசு வெளியிடும் என நம்புகிறோம்.
செயல் திட்ட வரைவை மத்திய அரசு உருவாக்கி விட்டதாக மே 7-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மத்திய அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடர விரும்புவில்லை. இது தொடர்பாக, தமிழக அரசின் மனு உள்பட அனைத்து மனுக்களும் முடித்து வைக்கப்படுகின்றன என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்த வரைவு செயல் திட்டத்தில் தெரிவிக்கப்பட்ட் விவரம் வருமாறு :
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக தமிழகம், கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் இனி காவிரி மேலாண்மை ஆணையத்தையே அணுக வேண்டும். மத்திய அரசின் உதவியை மட்டும் நாடலாம். இறுதி முடிவை எடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை.
பெங்களூருக்குப் பதிலாக காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைமை அலுவலகம் புது தில்லியில் செயல்பட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. அதே சமயம், அதன் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் அமைக்கப்படும்.
காவிரி நீர் பங்கீடு, நீர் திறப்பு, கண்காணிப்பு, மேற்பார்வை ஆகிய அனைத்து அதிகாரங்களும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு வழங்கப்படுகின்றன. நீர்ப் பங்கீட்டில் உள்ள சிக்கல்களை 4 மாநிலங்களும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுகித் தீர்த்துக் கொள்ள வேண்டும்.
தொடர் செய்திகள் : காவிரி மேலாணமை வாரியம் தமிழகம் கர்னாடகம் நிலை என்ன