இந்தியாவில் ரூ. 200 கோடி வசூலித்த முதல் ஹாலிவுட் படம் என்கிற பெருமையைப் பெற்ற அவெஞ்சர்ஸ் படம், இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படம் என்கிற சாதனையையும் படைத்தது. இதற்கு முன்பு தி ஜங்கிள் புக் படம் மொத்தமாக ரூ. 261 கோடியும் வரிகள் நீங்கலாக ரூ. 188 கோடியும் வசூலித்தது. ஆனால் அவெஞ்சர்ஸ் படம் இந்தியாவில் ரூ. 225 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
ராபர்ட் டெளனி ஜூனியர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், மார்க் ருஃபல்லோ நடிப்பில் ஆந்தோனி ரூஸோ, ஜோ ரூஸோ இயக்கியுள்ள அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (Avengers: Infinity War) அவெஞ்சர்ஸ் படத்தின் மூன்றாம் பாகம் இது. இந்தியாவில் ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.
இந்நிலையில் படம் வெளியான ஏழு வாரம் கழித்து, உலகளவில் 2 பில்லியன் டாலர் (ரூ. 13,000 கோடி) வசூலித்துள்ளது அவெஞ்சர்ஸ்.
இதற்கு முன்பு மூன்று படங்களே இந்த அசாத்தியமான வசூலை எட்டியுள்ளன. அவதார், டைட்டானிக், ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் (Star Wars: The Force Awakens) ஆகிய மூன்று படங்கள் மட்டுமே 2 பில்லியன் டாலரை வசூலைத் தாண்டிய நிலையில், இந்த வெற்றிக்கோட்டை எட்டிய நான்காவது படம் என்கிற பெருமையைப் பெற்றுள்ளது அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்.
உலகளவில் அதிகம் வசூலித்த படங்கள் விவரம் :
அவதார் - 2.788 பில்லியன் டாலர் (ரூ. 18,841 கோடி)
டைட்டானிக் - 2.187 பில்லியன் டாலர் (ரூ. 14,783 கோடி)
ஸ்டார் வார்ஸ்: தி ஃபோர்ஸ் அவேகன்ஸ் - 2.100 பில்லியன் டாலர் (ரூ.14,188 கோடி)
அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் - 2.002 பில்லியன் டாலர் (ரூ.13,526 கோடி)
ஜூராஸிக் வேர்ல்ட் - 1.671 பில்லியன் டாலர் (ரூ.11,298 கோடி)
அவெஞ்சர்ஸ் படம் 48-வது நாளன்று 2 பில்லியன் டாலர் வசூலை எட்டியதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
தொடர் செய்திகள் : காலா கமர்ஷியல் படம் அல்ல