கதை ஏற்கனவே இந்திய திரையுலகம் துவைத்து காயப்போட்ட கதைதான்.. ஏழைகளின் நிலத்தை பறிக்கும் அரசியல் அதிகார கூட்டம், அதை எதிர்க்கும் தாதா. இதில் வழக்கமான ரஞ்சித் பார்மூலாக்கள் அவ்வளவுதான். படத்தில் முதல் ஈர்ப்பு ஈஸ்வரிராவ். அப்படியொரு நடிப்பு. தன் கணவன் முன்னால் காதலியை பார்த்துவிட்டு வருகிறான் என தெரிந்தும்... நானும் போறேன்...
ஏழாப்பு படிக்கும் போது தப்பு அடிக்கிறவன் என்பின்னாலே வந்தான்.. அவன பார்க்கணும் போல இருக்கு என சொல்லும் காட்சியிலும், தொடந்ந்த காட்சியில் (காதலிய பார்க்க) சொல்லிட்டு போயிருக்கலாம்லா என கேட்கும் இடத்திலும்.. அப்பப்பா அவங்க வந்து நிக்கதுறதும், கண்ண கசக்கறதும் எல்லாம் பார்த்தேன் என கிடைத்த இடங்களில் எல்லாம் அம்மணி புகுந்து விளையாடி இருக்கிறார்.
மகன்களோடு உரையாடும் காட்சிகளிலும் அசத்தல். அடுத்து படத்தின் சகநடிகர்கள் எல்லாருமே வாழ்ந்திருக்கிறார்கள். எவரும் தனித்து தெரியவில்லை. சமுத்திர கனி தவிர.அவருக்கு அந்த உடல்மொழியே வரவில்லை.
இதை தாண்டி என்ன சொல்லவென தெரியவில்லை...? கதை ஒகே. ஆனால் சொல்லும் விதம் என ஒன்று இருக்கிறதே ? வேங்கையன் மகன் கரிகாலன் நாற்பது ஆண்டுகளாக அந்த தாராவியில் இருக்கிறார்... என்ன செய்கிறார்... ? பெரிய வீட்டில் இருக்கிறார்...
ஆனால் இப்போதும் அந்த குப்பத்தில் டாய்லெட்டுக்கு வரிசையில் நிற்கும் கொடுமை இருக்கிறது. கரிகாலனின் கடைசி மகன் லெனின் அடிதடியை விட போராட்டமே சிறந்தது என போராடுகிறான். முதல் காட்சிகளில் அவனை கிண்டலடிக்கும் ரஜினி கடைசியில் அனைவரையும் அழைத்து பெரிய போராட்டம் செய்கிறார்.
அவரை ஏரியாவே பெரிய தாதா என்கிறது. பயப்படுகிறது. தன் மகன் மனைவி கொடூரமாக கொல்லபட்ட பிறகும்கூட கோபம் வராமல் போய் பேசிவிட்டு முடிஞ்சா முதுகுல குத்திக்கோ என வசனம் பேசிவிட்டு வருகிறார். இத்தனைக்கும் அது சொந்த பகை கிடையாது.. நிலம் வேண்டும்... என்ற அதிகாரமே காரணம். சரி கடைசியில் தாராவியை எரித்து நீர்முலமாக்கிய ஹரிதாதாவை ஏதாவது செய்ய பெரிய அவதாரம் எடுக்கபோகிறார் என பார்த்தால் அதுவும் இல்லை... கறுப்பு , சிவப்பு , நீலம் என பொடிகளை தூவி ஒரு அலறலோடு படம் முடிகிறது.
நானே பாடேகர்... ? அரசியல்வாதியா ? மாஃபியாவா ? இல்லை அரசியல் அடியாளா ? ஏன் இவ்வளவு குழப்பம். நிலம் தான் முக்கியமெனில்.... ரஜினியை காலில் விழு ஏன் திரும்ப திரும்ப சொல்லிகொண்டே இருக்கிறார்... ? பொம்மலாட்டம் படத்தில் வந்த நானாவா இது ? இருவரும் சந்திக்கும் காட்சிகளில் சந்தோஷ் நாரயணன் மட்டுமே தெரிகிறார்.
அருமையான உழைப்பு படத்தில் அவருடையது. படம் திரைக்கதையில் அல்லாடுகிறது. ரஜினியின் பழைய காதலி வரும் காட்சிகளில் அழுத்தமும் இல்லை ஈர்ப்பும் இல்லை. வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் போலவே தொடர்கிறது. இடைவேளைக்கு பிறகு படம் இன்னும் அல்லாடுகிறது. அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்க முடிகிறது என்பதைவிட கொடூரம்.. அது அழுத்தமாகவும் காட்சியாக்கப்படவில்லை என்ற வருத்தம்.
வசனம் சில இடங்களில் அட போடவைக்கிறது. படத்தில் இந்துத்துவா அதிகாரங்கள் பரவலாக காட்டப்படுகிறது. கொடிகள், தோரணங்கள். இது போக கிளீன் இந்தியா. ஆனால் அதையும் அழுத்தமாக சொல்லாமல் கடந்து போகிறது.
அரசாங்கம் ஏற்கனவே ஒரு குடிசைபகுதியை அப்புறபடுத்தி அவர்களை பல மாடி கட்டத்தில் குடி வைத்திருக்கிறது. அங்கே லிப்ட் கூட இல்லை. முப்பதாவது மாடியில் இருப்பவரும் நடந்துதான் செல்லவேண்டும். தண்னீரும் அப்படியே.. ஒரு குடித்தனத்தில் பத்து பதினைந்து பேர்...
அழுத்தமாக சொல்லி இருந்தால் அவர்களின் வலியும் அரசின் ஏமாற்றுதலும் புரிந்திருக்கும். ஒரு காட்சியில் கடந்து சென்றுவிடுகிறது. அதுவும் கடனே என்று.
ரஜினியா ? என சில இடங்களில் கேட்க வைக்கிறார். அவ்வளவுதான்... மற்றபடி படத்தில் அவருக்கான நடிப்பு காட்சிகள் வெகு குறைவு. ஜல்லிகட்டு போராட்டத்தில் பேசிய காவல்துறை ஊழியர், உணவளித்த இஸ்லாமியர்கள், அங்கே நிகழ்ந்த கலைநிகழ்வுகள் என படத்தில் அப்படியே வருகிறது . கூடவே எப்படி அதிகாரமும் காவல்துறையும் உள்ளே நுழையும் என்பதும் காட்சியாக்கபட்டிருக்கிறது.
ரஜினியின் மாஸ் லுக்கை அவர் தவறவிட்டுவிட்டார் என்றே நினைக்கிறேன். ரஜினி வேறு ஒரு பரிணாமத்தில் காட்சியளித்தாலும் ஊசாலாடும் திரைக்கதை, அழுத்தமில்லாத காட்சியமைப்புகள் என நம்மை... கொஞ்சம் நெளிய வைக்கின்றன.
படம் பார்க்கலாமா ? பார்க்கலாம். பார்க்க முடியாத அளவுக்கு மோசமில்லை. பார்த்தே ஆகவேண்டிய படா (பெரிய) கமர்ஷியல் படமும் அல்ல.
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் ரஞ்சித் & ரஜினி
எழுதியவர் : பா. சரவண காந்த்
வகை : சமூகவியல்
இயக்குனர் : பா. ரஞ்சித்
தயாரிப்பாளர் : தனுஷ்
கதை : பா. ரஞ்சித்
இசையமைப்பு : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : முரளி. ஜி
படத்தொகுப்பு : ஏ. சேகர் பிரசாத்
ஸ்பெல்கோ ராங்க் : 1/5
தொடர் செய்திகள் : பாகுபலி - திரை விமர்சனம்