கனடா "நேர்மை இல்லாமல்" நடந்து கொள்வதாகக் கூறி, ஜி7 மாநாட்டின் முடிவில் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வமான கூட்டு அறிக்கைக்கான அதரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் திரும்பப் பெற்றுக்கொண்டார்.
அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அதிக வரியை சுமத்துவதாகவும் டிரம்ப் குற்றம் தெரிவித்தார்.
எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு அமெரிக்கா வரி விதித்துள்ளதால் ஏற்பட்ட பதட்ட நிலை இருப்பினும், "விதிகள் அடிப்படையிலான வர்த்தக அமைப்பை" பரிந்துரைக்கும் கூட்டு அறிக்கை எட்டப்பட்டது.
ஜூலை ஒன்றாம் தேதியன்று இதற்கான பதில் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல உள்ளதாக செய்தியாளர்களை சந்தித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியளித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட வரிகளை நியாயப்படுத்த, தேசிய பாதுகாப்பு குறித்து கவலையை எழுப்பும் டிரம்பின் முடிவு அவமானகரமானது என்று விவரித்தார்.
"இது வருந்தமளிப்பதாக உள்ளது. ஆனால், ஜூலை 1ஆம் தேதியன்று முன்னெடுத்து செல்லக்கூடிய பதில் நடவடிக்கைகள் தெளிவாகவும் உறுதியுடனும் இருக்கும்" என்று குறிப்பிட்ட ட்ரூடோ, "கனடா மக்கள் அமைதியானவர்கள், ஆனால் எப்படி வேண்டுமானாலும் எங்களை நடத்த முடியாது" என்று தெரிவித்தார்.
இதற்குமுன், அதிபர் டிரம்புடன் வெளிப்படையாகவோ அல்லது தனிப்பட்ட விதத்திலோ பிரதமர் ட்ரூடோ இவ்வாறு பேசியதில்லை என்று அவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதிபர் டிரம்பின் முடிவு முரணாக இருந்தாலும், ஜி7 மாநாட்டின் முடிவில் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வமான கூட்டு அறிக்கைக்கு ஆதரவு தருவதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.
ஜி7 மாநாட்டின் அதிகாரப்பூர்வமான கூட்டு அறிக்கையில் உள்ள கடமைகளுக்கு ஆதரவாக இருப்போம் என்று பிரிட்டன் அரசின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னுடனான பேச்சுவார்த்தைக்காக சிங்கப்பூருக்கு செல்லும் டிர்ம்ப், "வாகனங்கள் மீதான வரிகளை பார்க்கும் வரை, கூட்டு அறிக்கைக்கு ஒப்புக் கொள்ள வேண்டாம்" என்று அமெரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் ட்ரூடோ தவறான கருத்துகளை கூறியதாகவும், அமெரிக்க விவசாயிகள், பணியாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கனடா அதிகளவிலான வரிகள் விதிப்பதன் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
கனடா பிரதமர் ட்ரூடோ, "நேர்மையற்றவர் மற்றும் பலவீனமானவர்" என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.