சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காரைக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் கூறியதாவது:

Special Correspondent

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், இந்திய பொருளாதாரம் 3 மடங்கு வளர்ச்சியைக் கண்டது. பத்தாண்டுகால ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் எந்த உரிமையையும் பறிக்கவில்லை.

அப்போதுதான், தகவல் அறியும் உரிமை, வேலை உறுதிக்கான உரிமை, கல்விக்கான உரிமை என ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தந்தது. அதிலும், 9வது ஆண்டில் உணவுக்கு உரிமையை தந்தது. மனித உரிமையை மதித்தது.

ஆனால், இன்று இஸ்லாமிய மக்கள், கிறிஸ்தவர்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள். அவர்களின் குரல் ஒடுக்கப்படுகிறது. மத்தியில் கடந்த 4 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் சரிந்துள்ளது.

ஆய்வு ஒன்றில் மக்கள் மத்தியில் கேட்கப்பட்ட கேள்விக்கு 48 சதவீதம் மக்கள் இதனை தெரிவித்திருக்கிறார்கள். ஆட்சிக்கு வரும் போது கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் ரூ. 15 லட்சம் வங்கிக்கணக்கில் போடுவதாக சொன்னார் மோடி.

ஆனால், அதற்கு மாறாக பணமதிப்பிழப்பை ஏற்படுத்தி ரூ. 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ளனர். இதனால், தமிழகத்தில் ஏற்றுமதி குறைந்துவிட்டது. 2 லட்சத்து 67 ஆயிரம் சிறு, நடுத்தரத்தொழில்கள் இருந்த நிலையில் 50 ஆயிரம் சிறு, நடுத்தரத்தொழில்கள் மூடப்பட்டுவிட்டன.

5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். ரூ.13 ஆயிரம் கோடி முதலீடு குறைந்திருக்கிறது. திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதியில் ரூ. 16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டும் இந்த நிலை என்றால் நாட்டில் உள்ள பிற மாநிலங்களின் இழப்பு எப்படி இருக்கும்?

எனவே தொழில்கள் முடக்கம், தொழிலாளர்கள் வேலையிழப்பு, முதலீடுகள் குறைந்துள்ளதற்கு நரேந்திரமோடி அரசே காரணம் என குற்றம்சாட்டுகிறேன் என்றார்.