தமிழகத்தில் கடந்த ஓராண்டில் 50 ஆயிரம் சிறு, குறுந்தொழில்கள் மூடப்பட்டுள்ளன.
சட்டசபையில் தாக்கலான தொழில் வளர்ச்சி குறித்த கொள்கை விளக்க குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016-17 ம் ஆண்டில் தமிழகத்தில் 2.67 லட்சம் சிறு, குறு நடுத்தர தொழில்கள் இயங்கி வந்தன.
2017-18 ம் ஆண்டில் சிறு, குறு,நடுத்தர தொழில்கள் எண்ணிக்கை 2.17 லட்சமாக சரிந்துள்ளன. அதேபோல் தமிழகத்தில் புதிய தொழில்களில் செய்யப்பட்ட தொழில் முதலீடும் ரூ.11. ஆயிரம் கோடி சரிந்துள்ளது.
2016-17 ம் ஆண்டில் ரூ.36,221 கோடியாக இருந்த தொழில் முதலீடு 2017-18 ம் ஆண்டில் ரூ.25,373 கோடியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதேபோல் கடந்த நிதியாண்டில் 5 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக பேரவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016-17 ம் ஆண்டில் 18,97,619 ஆக இருந்த வேலைவாய்ப்பு 2017-18ல் 13,78,544 ஆக சரிந்துள்ளது.
அரசின் கொள்கை குறிப்பில் புள்ளி விவரம் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. எதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டவில்லை.
தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னேறி வருகிறது என்று முதல் அமைச்சர் உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் தொடர்ந்து தெரிவித்த வந்த நிலையில் 50 ஆயிரம் சிறு, குறுந்தொழில்கள் மூடப்பட்டு, 5 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளது மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.