தமிழகத்தில் சென்னை, சேலம், கும்பகோணம், மதுரை உள்பட 7 போக்குவரத்துக் கழகங்கள் உள்ளன. சமீபத்தில் பஸ் கட்டணத்தை அரசு பல மடங்கு உயர்த்தியதால் பொதுமக்கள் கொந்தளித்தனர்.

Special Correspondent

கட்டண உயர்வை கண்டித்து பலர் அரசு பஸ்களை புறக்கணித்தனர். இதனால் அரசு எதிர்பார்த்த அளவு வருவாய் கிடைக்கவில்லை. கட்டண உயர்வால் அரசுக்கும், போக்குவரத்துக் கழகங்களுக்கும் மக்கள் மத்தியில் பெரும் அவப்பெயர் ஏற்பட்டது. இதை சரிசெய்யவும், பயணிகளை கவரும் வகையிலும் புதிய நவீன பஸ்கள் வாங்க அரசு திட்டமிட்டது.

இந்த பஸ்கள் மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் புதிய விதிகளின்படி வடிவமைக்கப்படும் என கூறப்பட்டது. கடந்த ஓராண்டாக இந்த பணிகள் நடந்து வருகின்றன. இதுதொடர்பாக அவ்வப்போது போக்குவரத்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தமிழகத்தில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய 2,000 பஸ்கள் விரைவில் இயக்கப்படும் என தெரிவித்து வந்தார். பின்னர் 4,000 பஸ்கள், 5,000 பஸ்கள் ஒரு மாதத்தில் கொண்டுவரப்படும் என்றெல்லாம் அமைச்சர் தெரிவித்தார்.

ஆனால் அவர் சொல்லி பல மாதங்கள் கடந்தும் இதுவரை எங்கும் ஒரு புதிய பஸ் கூட ஓடவில்லை. நீண்ட தாமதத்துக்குப் பின் ஒரு வழியாக புதிய பஸ்கள் வாங்கப்பட்டு, பாடி கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கிடையில், சேலம், கும்பகோணம் ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் குறிப்பிட்ட அளவு புதிய பஸ்கள் பாடி கட்டப்பட்டு பதிவெண் வாங்கும் பணிகளுக்காக கொண்டு வரப்பட்டன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்த பச்சை நிறத்துக்கு பதில், புதிய பஸ்களில் நீலம் மற்றும் சாம்பல் நிறத்தில் வர்ணம் பூசப்பட்டுள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது. ஆனால், எந்தெந்த போக்குவரத்துக் கழகங்களுக்கு எத்தனை பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது, மொத்தம் எத்தனை பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது, எந்த தேதியில் அவை பயன்பாட்டிற்கு வரும் என்ற ஒரு தகவலும் அரசு தெரிவிக்கவில்லை. இதுகுறித்து போக்குவரத்து துறையில் உயர் பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரியிடம் கேட்டபோது, அவர் தங்களுக்கு ஒன்றும் தெரியாது, எல்லாம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

அந்த அதிகாரி கூறுகையில், ‘புதிய பஸ் வாங்கப்பட்டது, அதை எப்போது இயக்குவது என்ற தகவல் எல்லாம் எங்களுக்கு எதுவும் தெரியாது. அதெல்லாம் அமைச்சர் அலுவலகத்தில் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. நான் எதுவும் சொல்ல முடியாது. எல்லாவற்றையும் அமைச்சர் சொல்வார்’ என்று கூறினார். கோடிக்கணக்கில் செயல்படுத்தப்பட உள்ள புதிய பஸ் திட்டம் குறித்து, அத்துறையின் உயரதிகாரிகளுக்கே எதுவும் தெரியாது என்று கூறியிருப்பது போக்குவரத்து துறையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்பு செய்திகள் : போக்குவரத்து ஊழியர்கள் நடத்தும் பஸ் ஸ்டிரைக் 5வது நாளாக நீட்டிப்பு