உயர் மதிப்புடைய 500 , 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டபோது, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இயக்குநராக பதவி வகித்துவரும் ஆமாதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி இரவு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். தங்களிடம் உள்ள அத்தகைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியது.
அதைத் தொடர்ந்து, பல்வேறு வங்கிகளில் ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய கூட்டம் அலை மோதியது.அப்போது, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகள் அல்லாமல் மாவட்ட கூட்டுறவு வங்கிகளும் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பெற்று வந்தன.
ஆனால், கூட்டுறவு வங்கிகளில் பல முறைகேடுகள் நடப்பதாகப் புகார் எழுந்ததை அடுத்து, அந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி முதல் அத்தகைய வங்கிகளில் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்தது.
எனினும், நவம்பர் 9-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் மொத்தம் ரூ.754.59 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இது இதர மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் செலுத்தப்பட்ட தொகையைக் காட்டிலும் மிகவும் அதிகமாகும்.
மனோரஞ்சன் எஸ். ராய் என்பவர், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவலை அளிக்கக் கோரி விண்ணப்பித்திருந்தார்.
அவரது கேள்விக்கு, வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கியின் தலைமை பொது மேலாளரும், மேல்முறையீட்டு அதிகாரியுமான எஸ்.சரவணவேல் பதிலளித்தார். அந்த பதிலில் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளது.
அந்த வங்கியின் தலைவராக கடந்த 2000-ஆம் ஆண்டு அமித் ஷா பதவி வகித்தார். அதையடுத்து, அந்த வங்கியின் இயக்குநராக பல ஆண்டுகளாக அவர் இருந்து வருகிறார்.
அந்த பதிலில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2017-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி, ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் மொத்தம் இருப்புத் தொகை ரூ.5,050 கோடி. 2016-17-ஆம் நிதியாண்டில் அந்த வங்கியின் நிகர லாபம் ரூ.14.31 கோடி ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிக்கப்பட்ட அடுத்த சில தினங்களில், ராஜ்கோட் மாவட்ட கூட்டுறவு வங்கியில் மொத்தம் 693.19 கோடி செலுத்தப்பட்டுள்ளது.
ராஜ்கோட் வங்கியின் தலைவராக இருக்கும் ஜெயேஷ்பாய் விட்டல்பாய் ராடாடியா குஜராத் அரசில் கேபினட் அமைச்சராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜ்கோட், பாஜகவின் அரசியல் மையமாக குஜராத்தில் கருதப்பட்டு வருகிறது. இந்த மாவட்டத்திலிருந்துதான் பிரதமர் மோடி கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பாஜக தலைவராக இருக்கும் அமித்ஷா இயக்குனர் ஆக உள்ள் வங்கியில் ஆர்டிஐ தகவலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர் செய்திகள் : எடியூரப்பாதான் உண்மையிலேயே மிகப்பெரிய ஊழல்வாதி : அமித்ஷா