இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் கையிருப்பில் உள்ள ரூ.9,59,000 கோடி ரூபாயில் இருந்து ரூ.3,60,000 கோடி ரூபாய் மத்திய நிதி அமைச்சகம் கேட்டுள்ளதாகவும், இதனைத் தர மறுத்ததால் இருதரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியான நிலையில் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கும் இடையேயான மோதல் தற்போது அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் ரிசர்வ் வங்கியிடமிருந்து ரூ.3,60,000 கோடியைக் கேட்டு மத்திய அரசு நெருக்கடி அளித்து வருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் வங்கிகளில் ரூ.50 கோடி மற்றும் அதற்கும் மேல் கடன் வாங்கிவிட்டு, திருப்பிச் செலுத்தாதவர்கள் பெயர்களைத் தெரிவிக்காத விவகாரத்தில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது. தற்போது இந்த சம்பவம் மத்திய அரசுக்கும் அர்பிஐக்கும் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.
இது தொடர்பாக டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி, பிரதமர் மோடியின் தவறான பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள குழப்பத்தைத் தீர்க்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.
இதற்கு கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்குமாறு நாட்டு மக்களிடம் ராகுல்காந்தி ட்விட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மோடி அரசு தன்னிச்சையான அமைப்புகளை அழித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலைமையை பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும் தேசத்தை காக்க எதிர்த்து நிற்குமாறு, ட்விட்டரில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.