தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு 2017-2018-ம் ஆண்டு காலகட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை குறித்த ஆய்வு மேற்கொண்டது.
 
தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு மேற்கொண்ட ஆய்வு விவரத்தை பிஸ்னஸ் ஸ்டான்டர்டு(Business Standard) செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
 
பண மதிப்பு நீக்கத்துக்கு பிந்தைய 2017-2018-ம் ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
அந்த ஆய்வு குறித்த விவரங்களை வெளியிட மத்திய அரசு தாமதப்படுத்துகிறது என்று காரணம் கூறி தேசிய புள்ளிவிவர ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து பி.சி.மோகனன் மற்றும் ஜே.வி.மீனாட்சி ஆகிய இருவரும் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பதவி விலகினார்கள்.
 
அந்த விவகாரம் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
 
மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு எடுக்கப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ ஆய்வாகும். பிஸ்னஸ் ஸ்டேன்டர்ட்(Business Standard) பத்திரிகையின்படி, ’1972-73 ஆண்டுகளில் இருந்த அளவுக்கு வேலையில்லாத நிலை இந்தக் காலத்தில் அதிகரித்துள்ளது.
 
2011-2012-ம் ஆண்டுகளில் இருந்த வேலையில்லாத நிலையின் அளவைவிட 2.2 சதவீதம் குறைந்துள்ளது. 2017-2018-ம் ஆண்டுகளில் இளைஞர்களுக்கான வேலையில்லாத நிலையின் அளவு இதுவரையில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
 
கிராமப் பகுதி இளைஞர்களுக்கான (15-19 வயதுக்குட்பட்டவர்கள்) வேலையில்லாத நிலை, 2011-12 ஆண்டுகளில் 5 சதவிதமாக இருந்தது.
 
ஆனால், 2017-18-ம் ஆண்டு கால கட்டத்தில் 17.4 சதவீதமாக அதிகரித்துள்ளது.
 
கிராமப் பகுதி பெண்களுக்கான வேலையில்லாத நிலையின் 2011-12 ஆண்டு காலக்கட்டத்தில் 4.8 சதவீதமாக இருந்தது.
 
ஆனால், 2017-18 காலகட்டத்தில் 13.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
 
படித்த கிராமப்புற பெண்களுக்கான வேலைவாய்ப்பு, 2011-12 காலகட்டத்தில் 15.2 சதவீதமாக இருந்தது, 2017-18 காலகட்டத்தில் 17.3 சதவீதமாக அதிகரித்துள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.