சபரிமலை விவகாரம் தொடர்பாக கேரளாவில் இன்று 620 கிலோ மீட்டர் தொலைவுக்கு ‘பெண்கள் மனித சுவர் போராட்டம்’ நடைபெற்று வருகிறது.
 
சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிரப்பு தெரிவித்து கேரளா முழுவதும் பாஜ, ஆர்எஸ்எஸ் மற்றும் பிற்போக்கு இந்துத்வா அமைப்புகள் போராட்டம் நடத்தின.
 
இந்தநிலையில் முதலில் தனிதனியாக 14 பெண்கள் சென்ற போதும்., பின்னர் குழுவாக சபரிமலை தரிசனத்திற்கு செல்ல சென்னை ‘மனிதி’ அமைப்பை சேர்ந்த 11 இளம்பெண்கள் சபரிமலைக்கு சென்ற போதும் பாஜ, ஆர்எஸ்எஸ் மற்றும் பிற்போக்கு இந்துத்வா அமைப்புகள் அவர்களை தடுத்தி நிறுத்தின
 
இதையடுத்து பக்தர்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக இந்து சாதி அமைப்புகள் மற்றும் சமுதாய தலைவர்களை அழைத்து முதல்வர் பினராயி விஜயன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
 
இக்கூட்டத்தில் ஜனவரி 1ம் தேதி (இன்று) கேரளாவின் வட மாவட்டமான காசர்கோடு முதல் தென்மாவட்டமான திருவனந்தபுரம் வரை 620 கிலோ மீட்டர் தொலைவுக்கு பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ‘பெண்கள் மனித சுவர் போராட்டம்’ நடத்த தீர்மானிக்கப்பட்டது.
பெண்கள் முன்னேற்றத்திற்காக இந்த போராட்டம் நடைபெறும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். ஆனால் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், பாஜ, முஸ்லீம் லீக் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்தநிலையில் இன்று மாலை 4 மணியளவில் இந்த பெண்கள் மனித சுவர் போராட்டத்தை திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தொடக்கி வைத்தார். திருவனந்தபுரம் வெள்ளையம்பலத்தில் சிபிஎம் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் போராட்டத்தை முடித்து வைக்கும் வகையில் கடைசியாக நிற்கிறார்.
 
இந்த போராட்டத்தில் காசர்கோடு முதல் திருவனந்தபுரம் வரை 50 லட்சம் பெண்கள் கலந்து கொள்வார்கள் என கேரள அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
 
இந்த போராட்டத்தில் பிரபல நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா கல்ளங்கல், பெண் எழுத்தாளர்கள் உள்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்து கொன்றனர்.
 
தேசிய நெடுஞ்சாலையின் இடது ஓரத்தில் இந்த மனித சுவர் பேராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எதிர்புறம் ஆண்களும் வரிசையாக நிற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. 3 மணியளவில் மனித சுவர் போராட்டத்திற்கான ஒத்திகை நடைபெற்றது. அதனை தொடர்ந்து சரியாக 4 மணி முதல் 4.15 வரை மனித சுவர் நடைபெற்றது. இதில் லட்சக் கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.