தமிழகத்தில் விடுபட்ட திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது குறித்து பரிசீலிப்பதாக திமுக எம்பிக்களிடம் தேர்தல் ஆணையம் உறுதி கூறியுள்ளது.
 
தமிழக சட்டசபையில் 21 இடங்கள் காலி இடங்களாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் 18ம் தேதி நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆனால் திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் குறித்து தேர்தல் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதனை தவிர்த்து மீதமுள்ள 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
 
இந்த நிலையில் விடுபட்ட மேற்கண்ட மூன்று தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்தக்கோரி திமுக சார்பாக ஆர்.எஸ்.பாரதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
 
மனுவை விசாரித்த நீதிமன்றம் திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் மற்றும் அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக அடுத்த 2 வாரத்தில் அதாவது 14 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பி நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்த நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவிடம், திமுக எம்பிக்கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ்.இளங்கோவன், திருச்சி சிவா ஆகியோர் நேற்று மனு அளித்தனர்.
 
பின்னர், திருச்சி சிவா நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், தேர்தல் நடத்தாமல் உள்ள திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் எந்தவித காரணமும் இல்லாமல் தேர்தல் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 
இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கில் தொகுதியின் வெற்றிக்கு எதிராகவோ அல்லது தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றோ எதையும் மனுதாரர் குறிப்பிட்டு தெரிவிக்கவில்லை.
 
இதைத்தவிர திருப்பரங்குன்றம் தொகுதி வழக்கு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு தொகுதிகளின் வழக்கும் விரைவில் திரும்பப்பெறப்படும் நிலையில் உள்ளது.
 
அதனால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் மூலம் ஒரு உத்தரவு வரும் வரை காத்திருக்காமல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளோம்.
 
மனுவை பரிசீலனை செய்த தேர்தல் ஆணைய அலுவலக அதிகாரிகள் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள 2 வாரம் அவகாசம் அதாவது 14 நாட்களுக்கு முன்னதாகவே மேற்கண்ட விடுபட்ட மூன்று தொகுதிகளில் தேர்தல் நடத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதாக உறுதியளித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.