ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள சுங்குவார்சத்திரம் அடுத்த திருமங்கலம் கண்டிகை பகுதியில், சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றும் மோகன்ராஜ் கல்லால் அடித்தும், மது பாட்டிலால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து கொலையாளிகளை சுங்குவார்சத்திரம் போலீஸார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ்(42). இவர் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலாரக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு வருடங்களாக ஓட்டேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த மோகன்ராஜ் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தான் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு மாற்றலாகி வந்துள்ளார். இந்த நிலையில், சுங்குவார்சத்திரம் அடுத்த திருமங்கலம் பகுதியில் இருந்து திருமங்கலம் கண்டிகை பகுதிக்கு செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை காலை மோகன்ராஜ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் போலீஸார் காவலர் மோகன்ராஜின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரனையில், கொலையான மோகன்ராஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பணிக்கு வந்திருக்க வேண்டும், ஆனால் அவர் பணிக்கு வராததும், மோகன்ராஜை கொலையாளிகள் தலையில் கல்லால் அடித்தும் மது பாட்டிலை உடைத்து வயிற்றில் குத்தியும் கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கொலை நடந்த இடத்தை காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி,எஸ்.பி.சந்தோஷ்ஹதிமானி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். மேலும் கொலை நடந்த இடத்திற்கு போலீஸார் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடய அறிவியல் துறை போலீஸாரும் கொலை நடந்த இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்து சென்றனர்.
சுங்குவார்சத்திரம் பகுதியில் காவலர் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையான காவலர் மோகன்ராஜுக்கு அன்புரோஜா என்ற மனைவியும், அபினேஷ்(14) என்ற மகனும், அபினயா(15), அகல்யா(14) ஆகிய மகள்களும் உள்ளனர்.
முன்னதாக ஏப்ரல் 2018 மாதத்தில் நடுரோட்டில் ஓட ஓட விரட்டி இதே ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டப்பகலில் பாஜவை சேர்ந்த வெங்கடேசன் (57) ஒன்றிய குழு தலைவர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மண்ணூரை சேர்ந்தவர் மண்ணூர் குட்டி (எ) வெங்கடேசன் (57). ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய குழு தலைவராக இருந்தார். முன்னதாக இவர், காஞ்சிபுரம் அதிமுக எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணை செயலாளராகவும் இருந்தார்.
இவர் மீது தொழிற்சாலை நிர்வாகிகளை மிரட்டியதாக சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வந்தனர். இதுபற்றி அதிமுக மேலிடத்துக்கு தெரிந்ததும், அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கினர். இதையடுத்து வெங்கடேசன், பாஜவில் இணைந்து, ஒன்றிய குழு தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வந்தார். தற்போது, இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் வீடு கட்டி வருகிறார்.
சம்பவ தினதன்று சுமார் 12 மணியளவில், திருமங்கலத்தில் உள்ள வெல்டிங் கடையின் முன் வெங்கடேசன் கார் நின்றது. அப்போது, காரை பின் தொடர்ந்து 3 பைக்கில் வந்த 6 பேர், டிரைவர் பக்கவாட்டில் இருந்த கண்ணாடியை வீச்சரிவாளால் வெட்டினர். இதனால், டிரைவர் ராமு அதிர்ச்சியடைந்தார்.
இதை பார்த்த வெங்கடேசன், காரில் இருந்து இறங்கி தப்பியோட முயன்றார். ஆனால், மர்மநபர்கள் அவரை விரட்டி சென்று சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில், அவர் நிலை குலைந்து கீழே விழுந்தார். இதை பார்த்ததும், அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். பின்னர், அவர் இறந்ததை உறுதி செய்த மர்மநபர்கள் பைக்கில் ஏறி தப்பி சென்றனர்.
கொலை குறித்து வெங்கடேசன் உறவினர்கள் கூறுகையில், ‘வெங்கடேசன் வீட்டின் எதிரே கார் நிறுத்துவதற்கு ஷெட் உள்ளது. இங்கு அவர், தனது காரை நிறுத்துவது வழக்கம், கடந்த 20 நாட்களுக்கு முன் ஷெட்டில் நிறுத்தப்பட்ட கார், நள்ளிரவில் மர்மநபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதுகுறித்து பெரும்புதூர் போலீசில், அவர் புகார் செய்தார். ஆனால் போலீசார், அந்த புகாரை வாங்கவில்லை. மர்மநபர்கள் எரித்ததாக வழக்குப்பதிவு செய்தால், குற்றவாளிகளை பிடிக்கும் வரை இன்சூரன்ஸ் கிடைக்காது. எனவே இன்ஜின் கோளாறில் மின்கசிவு ஏற்பட்டு, கார் எரிந்ததாக எழுதி கொடுக்கும்படி கூறியுள்ளனர்.
அதன்படி வெங்கடேசன் எழுதி கொடுத்துள்ளார். அதன்பின்னரும், போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுபற்றி டிஎஸ்பி ஜெயகுமார், இன்ஸ்பெக்டர் கண்ணய்யன் ஆகியோரை தொடர்பு கொண்டு கேட்டபோது, சரியான பதில் கூறவில்லை. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை அப்போதே பிடித்து இருந்தால், இப்போது இந்த கொலை நடந்து இருக்காது. எனவே இந்த கொலையில் போலீசாருக்கும் தொடர்பு உள்ளது,’ என்றனர்.
தொடர் செய்திகள் : பழனிசாமி பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் ஸ்டாலின் ஆவேசம்