விவசாய நிலங்களை பாதிக்கும் 8வழி பசுமை சாலையை எதிர்த்து தர்மபுரியை அடுத்த பாப்பிரெட்டிப்பட்டியில் 3 குடும்பங்களை சேர்ந்த 9 பேர், ஒரே நேரத்தில் நேற்று தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் 8 வழி பசுமை விரைவுச்சாலை 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட உள்ளது. இதற்காக 1,846 விவசாயிகளிடம் 439 ஹெக்டேர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.
இதற்கான நிலங்களை அளவீடு செய்து, முட்டுக்கல் நடும் பணிகள் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த இருளப்பட்டியில் நேற்று காலை 6மணிக்கே, பசுமை வழிச்சாலைக்காக விளைநிலங்களில் கல் நடும் பணியை அதிகாரிகள் துவக்கினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரகுமார், தனது விளைநிலம் முழுவதும் கறுப்பு கொடிகளை நட்டு வைத்து அதிகாரிகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
ஆனால் அதை பொருட்படுத்தாமல் ேபாலீஸ் படையுடன் வந்த அதிகாரிகள், சந்திரகுமாரின் நிலத்தை அளந்து கற்களை நட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவரும், அவரது மனைவி மணி, மகன்கள் பாலன், தமிழரசன் மகள் சுபா ஆகியோர் வீட்டுக்குள் சென்று மண்ணெண்ணெய் எடுத்து வந்து உடலில் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி, தங்கள் உடலில் மண்ெணண்ணெயை ஊற்ற முயன்றனர்.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த வேலன், அவரது மனைவி சூரியா, மனோகரன் மற்றும் அவரது மனைவி சாந்தி ஆகியோரும், தங்கள் நிலத்தில் அளவீடு செய்தால் தீக்குளிப்போம் என்று மண்ணெண்ணெய் பாட்டிலுடன் வந்ததால் பதற்றம் மேலும் அதிகரித்தது. ஒரே நேரத்தில் 3 குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அறிந்ததும், கிராம மக்கள் அப்பகுதியில் திரள ஆரம்பித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்யும் பணிகளை கைவிட்டு, அதிகாரிகள் ஓட்டம் பிடித்தனர்.
தொடர் செய்திகள் : “பசுமையை" அழித்துவிட்டு பசுமை சாலை அவசியமா கொதிக்கும் சேலம் பகுதி மக்கள்