அசாமில் மாநிலம் டின்சுயா மாவட்டத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் எந்திரத்துக்குள் புகுந்த எலி, ரூ.12 லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை துண்டு துண்டாக கடித்து குதறியிருப்பது வங்கி அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Special Correspondent

அசாம் மாநிலம், டின்சுகியா மாவட்டம் லாய்புலி பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் எந்திரம் கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை (மே 20) முதல் வேலை செய்யாமல் இருந்ததால் மூடப்பட்டது.

இதையடுத்து கடந்த வாரம் திங்கள்கிழமை (ஜூன் 11) ஏடிஎம் எந்திரத்தை சரிசெய்யவற்கு ஆட்களை அனுப்பியது வங்கி நிர்வாகம். எந்திரத்தை சரிசெய்ய வந்த ஊழியர்கள் குழு எந்திரத்தை திறந்து பார்த்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஏடிஎம் எந்திரத்துக்குள் புகுந்த எலி ஒன்று, எந்திரத்தில் நிரப்பப்பட்டிருந்த இரண்டாயிம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகளை சிறு சிறு துண்டுகளாக கடித்து குதறியிருந்தது. எலியால் ரூ.12 லட்சத்து 38 ஆயிரம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் சேதமாகி உள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கவுகாத்தி நிதி நிறுவனம் ஒன்று மே 19-ஆம் தேதி இந்த ஏடிஎம் எந்திரத்தில் ரூ. 29 லட்சம் டெபாசிட் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த திங்கள்கிழமை ஏடிஎம் எந்திரத்தில் இருந்து ரூ.17 லட்சம் மீட்டுள்ளதாக உள்ளூர் செய்தி சேனல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பழுதடைந்த ஏடிஎம் எந்திரத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் சரிசெய்யாமல் நீண்ட காலம் எடுத்துக்கொண்டது ஏன் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும், ஏடிஎம் மையத்திற்குள் என்ன நடந்தது என்பது குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளநிலையில், டின்சுகியா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர் செய்திகள் : அமிலக்கசிவை தடுக்க ஆலைக்கு மின்சாரம் கோரும் ஸ்டெர்லைட்