சென்னை காசிமேட்டில் ஓ.பி.எஸ், மதுசூதனன் ஆகியோரை வாழ்த்தி வைக்கப்பட்டு இருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டதால், பரபரப்பான சூழல் நிலவுகிறது.
காசிமேட்டில் மீனவ ஐக்கிய கிராம பஞ்சாயத்து சபை உள்ளது. இந்த சபையில் திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம் உள்ளிட்ட, 18 கிராம மீனவ கிராமங்களை சேர்ந்தவர்கள் நிர்வாகிகளாக உள்ளனர். 2016ம் ஆண்டு, நிர்வாகிகள் சிலர் பணம் கையாடல் செய்ததாக எழுந்த புகாரின் கீழ் பஞ்சாயத்து சபைக்கு சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 4 தினங்களுக்கு முன்னதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் சபையை திறந்து, வர்ணம் பூசினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுசூதனின் ஆதரவாளர்கள் சபைக்கு பூட்டுபோட்டனர். இதுதொடர்பாக காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பாக இந்த பஞ்சாயத்து சபையை அமைச்சர் ஜெயக்குமார் திறந்துவைத்து புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவை சேர்ந்த மதுசூதனன் ஆதரவாளரும், வட சென்னை மாவட்ட செயலாளருமான ராஜேஷ் உடனே அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிராக சங்க நிர்வாகிகளை நியமித்துள்ளார்.
இதையடுத்து புதிதாக நியமிக்கப்பட்ட சங்க நிர்வாகிகள் காசிமேடு பகுதியில் ஓ.பி.எஸ், மதுசூதனன் மற்றும் ராஜேஷ் ஆகியோரை வாழ்த்தி, பேனர்கள் வைத்திருந்தனர். இந்த பேனர்களை அமைச்சரின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் இரவு கிழித்ததாக கூறப்படுகிறது.தகவலறிந்து மதுசூதனனின் ஆதரவாளர்கள் நேற்று முன்தினம் இரவு காசிமேடு காவல்நிலையத்தை முற்றுகையிட்டு, பேனர்களை கிழித்த அமைச்சர் ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர். இந்த புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தபோதும், வடசென்னை பகுதியை பொறுத்தவரையில் இரு கோஷ்டியாக பிரிந்து அடிக்கடி மோதிக்கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.
எற்கனவே இதனால் காசிமேட்டில் ஜெயக்குமார் ஆதரவாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொடர் செய்திகள் : தினகரன் அணி விளாத்திகுளம் எம்எல்ஏ உமாமகேஸ்வரி தடாலடி