ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராடிய போது போலீஸ் துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்த பின்னர் ஆலை மூடப்பட்டது.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலைக்கான தண்ணீர் இணைப்பு, மின்சார இணைப்பு ஆகியவை துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த மே-28-ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி, இந்த ஆலை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அன்றே ஆலைக்கும் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆலையில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளதாக இன்று தகவல் வெளியானது. இதையடுத்து சார் ஆட்சியர் தலைமையில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை, தீயணைப்புத்துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு இன்று மாலை முதல் ஆலையில் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஆலையில் கந்தக அமில சேமிப்பு கிடங்கில் இருந்து லேசான ரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது அதிகாரிகள் நடத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. ஆலையில் ஏற்பட்டுள்ள லேசான கசிவை கண்டு பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை. ஆலையில் ஏற்பட்டுள்ள கசிவு நாளை சரிசெய்யப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகளின் ஆய்வு குறித்து சமூக ஊடகங்களில் பரபரப்படும் எதிர்மறையான தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம். இதுபோன்ற உறுதியற்ற, தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆய்வுக் குழுவின் ஆய்வறிக்கையைப் பற்றிப் பிறகு தெரிவிக்கப்படும் என்று ஆட்சியர் கூறினார்.
ஆலையில் ரசாயன கசிவை அடுத்து ஆலையைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மூடப்பட்ட ஆலையில் இருந்து கசிவு வந்தது எப்படி என்ற கேள்வியை அவ்வூர் மக்கள் எழுப்பி வருகின்றனர்...
மேலும் லேசான ரசாயன கசிவுக்கு ஏன் பலத்த போலிஸ் காவல் என்ற கேள்வியையும் மக்கள் எழுப்புகின்றனர்...
தொடர் செய்திகள் : அதிகாரிகள் இல்லாததால் நானே துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டேன்: இன்ஸ்பெக்டர் பகீர்