வருமானத்தை மறைத்ததாக நடிகை த்ரிஷாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை தீர்ப்பாயம் ரத்து செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 2010-11ம் நிதியாண்டில் ரூ.3,41,71,053 வருமானத்தை மறைத்தார் என்பதே இந்த வழக்கில் த்ரிஷா மீதான புகார் ஆகும். இதற்காக அவருக்கு ரூ.1,16,11,020 அபராதம் விதிக்கப்பட்டது.
2010-11 ஆண்டில் திரைப்படங்களுக்கு வாங்கிய அட்வான்ஸ் தொகையை 2012-13ம் நிதியாண்டில் தாக்கல் செய்த திருத்தப்பட்ட வருமானவரி கணக்கை காட்டியதாகவும் அதை கருத்தில் கொள்ளாமல் தனக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை ஆணையரிடம் த்ரிஷா தரப்பில் முறையிடப்பட்டது.
இதை ஏற்று வருமானவரித்துறை துணை ஆணையர் விதித்த இந்த அபராதத்தை பின்னர் ஆணையர் ரத்து செய்தார். அதை வருமானவரி மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் ஏற்றுக்கொண்டது.
இதன் பிறகு தீர்ப்பாயத்தை எதிர்த்து வருமானவரி முதன்மை ஆணையர் உயர்நீதிமன்றததில் மேல்முறையீடு செய்த நிலையில் தீர்ப்பாயம் ரத்து செய்தது செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
ஜெயலலிதாவும் வருமானவரி அபாரதம் குறித்த வழக்கில் போராடி இறுதியில் வருமானவரி குறிப்பிட்ட அபராத தொகையை கட்டிய நிலையில், வருமானவரி துறையை எதிர்த்த திரிஷா வென்றுள்ளார் என் அவரின் சட்ட அலோசகர்கள் தெரிவித்தனர்.
தொடர் செய்திகள் : வருமானத்தை காட்டாமல் ஏமாற்றியதால் நடிகை திரிஷா மீது வழக்கு தொடர்ந்தது வருமான வரி துறை