18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில், இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பு வழங்கினார்.
தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தனது தீர்ப்பில் தகுதி நீக்கம் செய்ய பேரவைத் தலைவருக்கு அதிகாரம் இல்லை என்று கூறமுடியாது.
பேரவைத் தலைவர் உத்தரவை பிறப்பிக்கும் முன்னர் ஆட்சியை கலைப்பார்களா, மாட்டார்களா என்ற இரண்டு வாய்ப்புகள் இருந்தது. அதனடிப்படையில் தகுதி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளார். இந்நிலையில் நீதிமன்றம் தலையிட்டு இந்த முடிவை எடுக்க வேண்டுமென பேரவைத் தலைவருக்கு உத்தரவிட முடியாது. அது நீதிமன்ற பணியும் இல்லை.
அவருக்கு கிடைத்த ஆவணங்கள், ஆதாரங்கள் அடிப்படையில் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் பிறபித்த உத்தரவுகளில் பேரவைத் தலைவர் அதிகாரங்களில் குறைந்த அளவிற்கே நீதிமன்றங்கள் தலையிட முடியும். முழுக்க முழுக்க சட்டவிதி மீறப்பட்டாலோ அல்லது சட்டவிதிகளை பின்பற்றாமலோ அல்லது சட்டத்திற்கு புறம்பாகவோ முடிவெடுத்திருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.
பேரவைத் தலைவர் முடிவெடுக்க பயன்படுத்தும் சட்டங்களில் முரண்பாடு இருந்தாலும் நீதிமன்றம் தலையிட முடியும். பேரவைத் தலைவர் தனக்கு தரப்பட்ட அதிகாரத்தை மீறி முடிவு எடுத்தாலோ, அவரது முடிவில் சட்டம் மீறபட்டிருந்தாலோ, இயற்கை நியதி மீறப்பட்டிருந்தாலோ மட்டுமே நீதிமன்றம் தலையிட முடியும்.
ஆனால் இந்த வழக்கில் பேரவைத் தலைவரால் இந்த சட்ட விதிகள் மீறப்பட்டதாக தெரியவில்லை. தனிப்பட்ட விரோதம் காரணமாக பேரவைத் தலைவர் இந்த நடவடிக்கை எடுத்தார் என்று எந்த ஒரு குற்றச்சாட்டும் மனுதாரர்கள் தரப்பில் கூறப்படவில்லை என்று கூறியிருக்கிறார்.
ஆனால் 18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பளித்தார்.
இருவரும் மாறுபட்ட தீர்ப்பை அளித்ததால், வழக்கு 3வது நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.
3-வது நீதிபதி தீர்ப்பு வழங்கும் வரை 18 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் தொடரும், அதுவரை பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும், இடைத்தேர்தல் அறிவிப்புக்கும் தடை நீடிக்கிறது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தகுதி நீக்க வழக்கில் 135 பக்க தீர்ப்பை வழங்கியுள்ள நீதிபதி சுந்தர் தீர்ப்பின் நகலில் கூறப்பட்டுள்ளதாவது:
"சபாநாயகரின் உத்தரவில் உள்நோக்கம் உள்ளது. அதனால் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கத்தில் நீதிமன்றம் தலையிடலாம். ஆளுநரிடம் மனு கொடுப்பது கட்சி தாவல் என்று அர்த்தம் ஆகாது. எடியூரப்பா வழக்கை கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆளுநரிடம் மனு அளித்ததால் தகுதி நீக்கம் செய்ய முடியாது. ஜக்கையன் என்ற எம்.எல்.ஏவுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. ஜக்கையன் தகுதி நீக்கம் செய்யப்படாததில் இருந்து சபாநாயகர் உள்நோக்கத்துடன் செயல்பட்டது தெரிகிறது.
சபாநாயகரின் அதிகாரம் மக்களின் நம்பிக்கையை பெறுவதற்காக மட்டும் தான். மக்களின் நம்பிக்கையை குலைப்பதற்காக அல்ல. சபாநாயகரின் முடிவு பாரபட்சமாகவும், சட்ட விதிகளுக்கு எதிராகவும் உள்ளது".
தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 111பேர் ஆதரவாக உள்ளனர்.
தினகரன் அணியில் 4பேர் சுயேட்சையிலான தனியரசு, கருணாஸ், அன்சாரி ஆகியோர் இருக்க திமுக கூட்டணியில் 98 எம்.எல்.ஏ.க்கள் உள்ளார்கள். தினகரன் அணியில் நீடிக்க விரும்பியோருக்கும், இந்த தீர்ப்பு , சிக்கலை ஏற்படுத்தி உள்ளது...
தற்போதைய நிலையில், அ.தி.மு.க., உறுப்பினர்களாகவும், தினகரன் ஆதரவாளர்களாகவும், திரிசங்கு நிலையில், 18 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர்.
முதல்வர் எடப்பாடி உறவினர் அமைச்சர் தங்கமணி நேரடியாக களத்தில் இறங்கி பேசவேண்டியதை பேசினார் என்றும் 8 எம்.எல்.ஏ.க்களிடம் ஒவ்வொருவருக்கும் 25சி என பேரம் போயுள்ளது என்றும், இதில் வடமாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் எம்.எல்.ஏ. அமைச்சர் தங்கமணியின் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு மற்ற தினகரன் அணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எட்டுபேரை வளைத்துக்கொண்டுபோக அமைச்சர் தங்கமணி இரவு பகலாக செயல்பட்டுவருகிறார் என்றும் கண்ணை சிமிட்டி சிரிக்கின்றனர் எடப்பாடி அதரவளார்கள்...
எடப்பாடி அரசுக்கு மேலும் அவகாசம் வழங்கவே மூன்றாவது நீதிபதியின் கருத்துக்கு விடப்பட்டுள்ளது. இதற்கு குறைந்தது மூன்று மாதங்கள் ஆகலாம்.
அவர் ஆதரவாக தீர்ப்பளித்தாலும், எதிராக தீர்ப்பளித்தாலும் உச்சநீதிமன்றத்துக்கு செல்லவும் வாய்ப்புள்ளது. ஆனால், உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே அது அளித்த தீர்ப்பு இருக்கிறது.
அது அளித்த தீர்ப்பையே திருப்பிச் சொல்ல ரொம்ப கால அவகாசம் எடுக்க முடியாது. ஆனால், அந்தா, இந்தா என்று 2019 மக்களவைத் தேர்தல் வரை இழுத்தடிக்க முடியுமா என்பதற்கே இந்த இழுத்தடிப்பு என்றும் அதிமுகவில் வெளிப்படையாகவே மகிழ்வுடன் கூறுகிறார்கள்..
ஒபிஎஸ் தரப்பு அதரவாளர்களோ எடப்பாடி கை அதிமுகவில் ஒங்குவதை கண்டு என்ன செய்வது என்று புரியாமல் தவிப்பதாக முக்கிய புள்ளி தகவல் தெரிவித்தார்...
இதில் 18 எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் கோர்ட் தீர்ப்பை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது என்று எடப்பாடியின் மிக முக்கிய அதரளவாளர் அமைச்சர் ஜெயகுமார் கூறியதும் குறிப்பிடதக்கது.
தொடர் செய்திகள் : வங்கி மோசடியில் மக்கள் இழந்த பணத்துக்கு பதில் என்ன சீறும் முன்னாள் கவர்னர்