மன்னர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு, இந்துக் கோவில்களும் அவற்றின் சொத்துக்களும் ஒரு சிலரின் வசமே இருந்தன.
இந்தக் கோவில்களை நிர்வகிப்பதிலும் ஊழல் இருந்ததோடு, கோவில் நகைகள், நிலங்கள் இஷ்டத்திற்கு விற்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவந்தது. இந்த நிலையில்தான் மதராஸ் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனிடம் மக்கள் முறையிட ஆரம்பித்தனர்.
இதையடுத்துதான் மதராஸ் நிலைக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் 1817ல் உருவாக்கப்பட்டது, சட்டம் எண் VII/1817. இந்தச் சட்டம் 1817 செப்டம்பர் 30ஆம் தேதி அமலுக்கு வந்தது.
இந்தச் சட்டத்தின் பிரிவு 15ல் ஒரு விஷயம் மிகவும் குறிப்பாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது இந்தச் சட்டத்தின் நோக்கம், கொடைகளை, கோவில் சொத்துகளை பராமரிப்பதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கமே தவிர, அவற்றிலிருந்து வரும் வருவாயை அரசுக்கு பயன்படுத்துவதல்ல என்று குறிப்பிடப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி இந்துக் கோவில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி முதலான கொடைகள் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் வேலை அப்போதைய வருவாய் வாரியத்திடம் அதாவது Board of Revenue-விடம் வழங்கப்பட்டது.
இந்த வேலைகளைச் செய்ய உள்ளூர் அளவில் முகவர்களை நியமிக்கும். ஆனால், இந்த உள்ளூர் முகவர்கள் சரியாக செயல்படாத நிலையில், 1863ல், அதாவது விக்டோரியா மகாராணி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு புதிய சட்டம் இயற்றப்பட்டது.
உள்ளூர் முகவர்களைக் கண்காணிக்க உள்ளூர் கோவில் குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்தக் குழுக்கள் கோவில்களை நிர்வகிப்பதிலும் பிரச்சனைகள் இருந்தன. ஆனால், மதப் பழக்க - வழக்கங்களில் தலையிடுவதில்லை என்ற விக்டோரியா அரசியின் கொள்கைகளின் காரணமாக, உள்ளூர்காரர்களின் கொள்ளைகள் தொடர்ந்தன.
மன்னர்களும் பிரிட்டிஷ் அரசும் கோவில்களுக்கு அளித்த சொத்துக்கள் கொள்ளை போயின. கோவில்களை நிர்வகித்தவர்கள், கோவில் சொத்துகளை தங்கள் சொத்துகளைப் போல அவற்றை கருதினர். கோவில் நகைகளுக்கு எந்தப் பட்டியலும் இல்லை (சிதம்பரம் நடராஜர் கோவிலைப் போல). இது தொடர்பாக யாராவது நீதி மன்றங்களை அணுகினால், கோவில் தரப்பில் ஸ்கீம் சூட் எனப்படும் வழக்குகள் தொடரப்ப்பட்டு, விரும்பிய ஸ்கீம்களுக்கு நீதிமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட்டது.
ஆகவே, 1926ல் நீதிக் கட்சி ஆட்சியின்போது மதராஸ் இந்து சமய அறநிலையங்கள் சட்டம் II/1927 இயற்றப்பட்டு இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது.
நிர்வாகம் சரியாக இல்லாத கோவில்களுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை இந்தச் சட்டம் அரசுக்கு வழங்கியது. ஆனால், இந்தச் சட்டத்திற்கு உயர் வகுப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதையடுத்து அப்போதை வைசிராயாக இருந்த இர்வினடம் முதலமைச்சர் பனகல் அரசர் விளக்கமளித்து இந்தச் சட்டத்திற்கு ஒப்புதலைப் பெற்றார். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, இந்தச் சட்டம் மேம்படுத்தப்பட்டது. இதையடுத்து 1951ல் மதராஸ் இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டம் XIX 1951-ல் இயற்றப்பட்டது.
முதன்முதலாக கீழிருந்து மேலாக அதிகார மட்டங்கள் இந்தச் சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டன. அதிகாரிகளின் நிர்வாக எல்லைகள் வரையறுக்கப்பட்டன. பாரம்பரிய அறங்காவலர் முறை ஒழிக்கப்பட்டது. ஆனால், இந்தச் சட்டத்திலும் சில குறைகள் இருந்தன. இவை களையப்பட்டு 1959ல் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959 இயற்றப்பட்டது.
இதன்படி கோவில்களையும் சமய நிறுவனங்களையும் நிர்வகிக்க புதிய அரசுத் துறை உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, இந்து அறநிலையைத் துறை ஆணையர் தன் கட்டுப்பாட்டில் உள்ள எந்த ஒரு கோவிலின் துணை, இணை ஆணையர்களையோ, அறங்காவலர்களையோ அழைத்து கணக்கு வழக்குகளைக் கேட்க முடியும்.
கோவில்களுக்கு, மத நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்தை ஐந்து வருடங்களுக்கு மேல் குத்தகைக்கு விடுக்கவும் விற்கவும் ஆணையரின் அனுமதி அறங்காவலருக்குத் தேவை. இஷ்டப்படி ஏதும் செய்ய முடியாது. இங்கு ஆணையர் என்பது அரசைக் குறிக்கும்.
இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டபோது முதலமைச்சராக இருந்தவர் காமராஜர். இந்தச் சட்டத்தின் காரணமாக மட்டுமே வர்ணாசிரம ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களும்கூட கோவிலின் நிர்வாகத்தில் தற்போது ஈடுகின்றனர். இதுதான் இப்போது எச்.ராஜா போன்ற பாஜக அர்எஸ்எஸ் அமைப்பில் உள்ள ஒரு குறிபிட்ட நபர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது என்கிறார்கள் சட்டம் பயின்ற சட்ட வல்லுனர்கள் ...தொடர் செய்திகள் : இந்து கோவில்கள் நிர்வாகிக்கப்படுவது எப்படி