ராஜஸ்தான் பரன் மாவட்டத்தில் உள்ள பிரமாண்ட முகப்பு பள்ளம், 75 ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன் விண்கல் விழுந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என புவியியல் ஆய்வு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Special Correspondent

ராஜஸ்தான் மாநிலம், பரன் மாவட்டத்தில் உள்ள ராம்கர் கிராமத்தில் 3.2 கிமீ விட்டத்தில் மிகப் பெரிய பள்ளம் உள்ளது. பிரமாண்ட கோப்பை போல் இருக்கும் இந்த பள்ளத்தின் பக்கவாட்டு உயரம் அதன் சுற்றுவட்டார தரைப் பகுதியிலிருந்து 200 மீட்டராக உள்ளது.

இந்தப் பள்ளத்தை இந்திய புவியியல் ஆய்வு மையம் கடந்த 1869ம் ஆண்டு கண்டுபிடித்தது. இது இயற்கை நிகழ்வுகளால் ஏற்பட்ட பெரும் பள்ளம் என லண்டனை சேர்ந்த அமைப்பு கடந்த 1960ம் ஆண்டுதான் அங்கீகரித்தது. இந்தப் பள்ளம் எப்படி ஏற்பட்டது என ஆய்வு செய்ய இந்திய புவியியல் ஆய்வு மையம் மற்றும் தேசிய கலை மற்றும் கலாசார மைய குழுவைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் நேற்று முன்தினம் ராம்கர் கிராமத்துக்கு வந்து பார்வையிட்டு, ஆதாரங்களை சேகரித்தனர்.

இது குறித்து இந்த குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் வினோத் அகர்வால் கூறுகையில், ‘‘3 கிமீ விட்டமுள்ள மிகப் பெரிய விண்கல், 75 ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு இங்கு விழுந்து இந்த பள்ளத்தை ஏற்படுத்தி இருக்கலாம். தரையிலிருந்து உயர்ந்து காணப்படும் இந்த பெரும் பள்ளம், விண்கல் விழுந்ததற்கான சரியான ஆதாரம்.

விண்கல் விழுந்த பள்ளம் எப்படியிருக்கும் என்பதற்கான சர்வதேச வரைமுறைகளுக்கு தகுந்தபடி ராம்கர் முகப்பு பள்ளம் உள்ளது. இன்னும் பல ஆதாரங்களும், இது விண்கல் விழுந்த பள்ளம் என்பதை நிருபிக்கிறது’’ என்றார்.

இந்த குழுவில் உள்ள மற்றொரு புவியியல் நிபுணர் புஷ்பேந்திர சிங் ரனாவத் கூறுகையில், ‘‘இது உலகின் 191வது முகப்பு பள்ளம் என விரைவில் கனடாவில் உள்ள சர்வதேச ஏஜன்சியால் அங்கீகரிக்கப்படும். இந்தியாவில் இது 3வது முகப்பு பள்ளம்’ என்றார்.

உலக புவியியல் கருத்தரங்கம் 2020ம் ஆண்டில் நடைபெற உள்ளது. அதில் ராஜஸ்தானின் ராம்கர் முகப்பு பள்ளத்துக்கு அங்கீகாரம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தொடர் செய்திகள் : சூரிய மண்டலத்தின் கதையை சொல்லும் EW95 விண்கல்