தமிழகத்தில் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்.

Special Correspondent

இதுகுறித்து சென்னை பிரஸ் கிளப்பில் யுவராஜ் அளித்த பேட்டி: தமிழகத்தில் ஆற்று மணல் விநியோகம் ஆன்லைன் மூலம் நடந்து வருகிறது. இதனால் அரசுக்கு நேரடியாக வருவாய் கிடைக்கிறது. சவுடு மண், ஏரி மண், பட்டா மண், கருங்கல், களிமண், செம்மண் உள்ளிட்ட மணல்களை அரசின் அனுமதி பெற்று தனியார் நிறுவனங்கள் கொள்ளை லாபம் அடித்து வருகின்றனர்.

அரசுக்கு ரூ.700 செலுத்திவிட்டு பொதுமக்களிடம் ஒரு லோடு ரூ.8 ஆயிரத்திற்கு விற்கின்றனர். இதை அரசு நேரடியாக ஆன்லைன் மூலம் விற்பனை செய்தால் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும்.

ஆற்று மணல் விநியோகத்தில் ஈடுபட்டு வந்த அதே மாபியா கும்பல் மேற்கண்ட கனிம வளங்கள் விநியோகத்தில் ஆக்கிரமிப்பு செய்து அதிக லாபம் பெற்று வருகின்றனர்.

எம்.சாண்ட் மணல் தரமற்ற முறையில் கடந்த 10 மாதங்களாக விநியோகிக்கப்படுகிறது. அரசு அறிவித்தும் இதுவரை 10 சதவீத கிரஷர் உரிமையாளர்கள் மட்டுமே பதிவு செய்துள்ளனர்.

தரமற்ற எம்.சாண்ட் மணல் விற்கப்படுவதால் அடுக்குமாடி கட்டிடங்களுக்கு கட்டுமான அனுமதியை அரசு உடனே நிறுத்த வேண்டும். தினமும் ஓசூர் பகுதியில் இருந்து 4000 லாரி லோடு கருங்கல், ஜல்லி மற்றும் எம்.சாண்ட் மணல் கர்நாடகாவுக்கு கடத்தப்படுகிறது. இந்த கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதால் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஊழல் நடைபெறுகிறது.

இந்த பிரச்சனையில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர் செய்திகள் : இறக்குமதி மணல் தமிழக அரசுக்கு உரிமை உள்ளாதா நீதிமன்றம் கேள்வி