கவுதமாலாவில் திடீரென எரிமலை வெடித்ததில் இதுவரை 100க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்ற அச்சம் நிலவுகிறது.
மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான கவுதமாலாவின் தலைநகரான கவுதமாலா சிட்டியிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் பியூகோ எரிமலை உள்ளது. பியூகோ எரிமலை கடந்த 2-ம் தேதி திடீரென வெடித்து சிதறியது. இந்த எரிமலை வெடித்து சுமார் 10 கிலோ மீட்டர் உயரம் வரை வானத்தில் பரவியுள்ளது. எரிமலை குழம்புகள் மற்றும் சாம்பல் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியுற்றனர்.
முதலில் 8 கிலோ மீட்டர் பகுதியை ஆக்கிரமித்த இந்த எரிமலை குழம்புகள் இப்போது 12 கிலோ மீட்டர் தூரம் வரை ஆக்கிரமித்துள்ளது.
கடும் இன்னல்களுக்கு மத்தியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தீவிரமீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று வரை 72 பேரின் உடல்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில் பியூகோ எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது.
இதனால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணிகளில் மேலும் 30-க்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 100-ஐ தாண்டியுள்ளது.
மீட்புபணிகள் குறித்து பேசிய மருத்துவர் கேர்லோஸ், கடந்த ஞாயிறு அன்றே மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அன்று முதலே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முழுநேர பணியில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.