அனைவரின் வீட்டிலும் மின்சாரம் என்பது ஒரு அரசாங்கத்தின் கடமை, நல்ல நோக்கமும் கூட. இன்னும் சொல்லப் போனால், பெருநகரங்களில் இருக்கும் அடிப்படை கட்டமைப்புகளை கிராமங்களுக்கும், குக்கிராமங்களுக்கும் கொண்டு செல்வது தான் நியாயமான சமூக நீதி. ஆனால் இந்த திட்டத்தில் இவைகளை காண முடிகிறதா :
1) இலவச/ஆரம்ப நிலை மின்சாரம் என்பது திட்டத்திலேயே கிடையாது. 10 யூனிட் தான் ஆகுமென்றாலும் பணம் கொடுத்து தான் ஆக வேண்டும்.
2) மின்சாரம் தேவைப்படும் குடும்பங்கள் ரூ. 500 முன்பணமாக செலுத்த வேண்டும். இந்த ரூ. 500, 10 தவணைகளாக அவர்களுடைய மின்சார பில்லோடு சேர்த்து டிஸ்ட்ரிப்யூஷன் நிறுவனங்களுக்கோ/மின்சார வாரியத்திற்கோ தரப் பட வேண்டும்.
3) கிராம பஞ்சாயத்துகள்/பொதுப் பணி துறைகளுக்கு விண்ணப்பப் படிவத்தில் ஆரம்பித்து பில் கலெக்ஷன் வரைக்கும் செய்வதற்கு அதிகாரம் உண்டு.
4) ஆதிவாசி இடங்கள், மலைகளில் மின் கம்பங்கள் வைக்க முடியாமல் போகுமென்றால் அவர்களுக்கு எல்.ஈ.டி விளக்கு, பேன் ஒரு பவர் பிளக் 200 - 500 வாட் பாட்டரி பேக் ஒன்றும் தரப்படும்.
மின் இணைப்பினைக் கொடுப்பதென்பது அரசின் கடமை. மின் பயனாளியாக மாறும் குடும்பங்களின் பயன்பாடு பொறுத்து அவர்களுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தான் நியாயமான செயல்.
இணைப்புப் பெறவே ரூ. 500 தர வேண்டும் என்பதெல்லாம் நேரடியாக 20% மக்களால் இயலாத காரியம். இதற்கும் வீட்டில் இணைய இணைப்பு வாங்கினால் “Installation Charges, Processing Charges, Modem Separate” என சொல்வதற்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. அரசு தனியார் போல இயங்க முடியாது. இயங்கக் கூடாது.
கொடுமையின் உச்சம் இந்த விண்ணப்பங்களை ஆன்லைனிலும் நிரப்பலாமாம் அல்லது கிராம பஞ்சாயத்துகளின் வழியே விண்ணப்பம் கொடுக்கலாம்.ஒரு கிராமத்தில் மின்சாரமே இல்லை எனும் போது அவர்கள் எப்படி ஆன்லைனுக்கு போய் விண்ணப்பம் போடுவார்கள்? ஏ.டி.எம் பின் மாற்றிக் கொடுக்க ரூ.50 கேட்கின்ற கேவலமான நிலையை பிரதமரின் பணமதிப்பு விஷயத்தில் கண்டோம்.
படிப்பறிவற்ற, ஏழை பாழைகள் பஞ்சாயத்துக்கு போய் நின்றால் பஞ்சாயத்து தலைவர் ஒவ்வொரு விண்ணப்பத்திலும் கமிஷன் அடிப்பார். கமிஷன் அடிப்பதோடு நில்லாமல் ‘மேலிட’ அழுத்தங்களால் ‘உங்களுக்கு எல்லாம் கரெண்ட் மோடி தான் தந்தார், நாம் அவருக்கு தான் வாக்களிக்க வேண்டும்’ என்பார்
நியாயமாய் அரசு செய்ய வேண்டியது என்ன? இது அரசின் கடமை. இதை அரசு நிறுவனங்களான REC (Rural Electrification Corporation), Power Grid வழியாகவும், மாநிலங்களின் மின்வாரியங்கள் வழியாகவும் மத்திய/மாநில அரசுகளே நிறைவேற்றுதல் அவசியம்.
அரசு ஊழியர்கள் மக்களைத் தேடிப் போய் மின் இணைப்பு தருவார்கள். அந்த மக்களுக்கு மின் பயன்பாட்டின் முக்கியத்துவத்தினை எடுத்து சொல்லி, குறைந்த பட்ச மின்சாரத்தினை இலவசமாக வழங்குவார்கள். அங்கிருந்து இந்தியாவின் பெருமளவிலான மக்கள் மின் பயன்பாட்டின் மூலம் கிடைக்கும் நவீன வசதிகளை பெற தயாராவார்கள். இது தான் சமூக நீதி. இது தான் மக்கள் நலன்.
இதை எதையுமே செய்யாமல் ப்ரீ பெய்டில் பெற ஒரு திட்டம். அதற்கு இவ்வளவு அலம்பல்கள். அதை விட பெரிய டார்க் காமெடி, பாஜக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் தீன் தயாள் உபாத்யாய க்ராம் ஜோதி யோசனா (DDUGJY) என்கிற திட்டத்தையும், ஏற்கனவே நடப்பில் இருக்கும் Integrated Power Development Scheme (IPDS) என்கிற திட்டத்தையும் இதே ‘அனைவருக்கும் மின்சாரம்’ என்கிற நோக்கத்துக்காக வைத்திருந்தது.
இப்போது இதே நோக்கத்திற்காக இந்த செளபாக்யா திட்டம் மூன்றாவது திட்டம். ஒரு அரசின் கடமையை தனிப்பட்ட வாக்கு வங்கியாக மற்றும் இந்த திட்டம்.
ஊழலை தரை மட்ட அளவில் decentralized ஆக செய்ய இதை விட சிறப்பான உபாயங்கள் எதுவும் கிடையாது. இதில் கீழேப் போகும் ஒவ்வொரு தாலுகா, பஞ்சாயத்து, கிராம போர்ட் லெவலிலும் ஊழல் நடக்கும், மத்திய அரசு ‘கண்டும் காணாமலும்’ இருந்துக் கொண்டு ‘மின்சாரத்தை கொடுத்தது நாங்கள் தான்’ என மக்களின் வாக்கு வங்கியை இந்த படிநிலை மூலமாக கறக்கவே முயலும்
உங்கள் அறிவுறுத்தல் மற்றும் பின்னுட்டம் எங்களுக்கு மிகவும் பயன் தரத்தக்கது . நாங்கள் சரியாக / நியாமாக ஒரு விஷயத்தில் இரு பக்கமும் செய்தியை முக்கியத்துவம் தருகிறோமோ என்று எங்களை தொடர்ந்து கண்காணித்து வழிநடத்த வேண்டுகிறோம் .. நன்றி - ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்க்கோ மீடியா ஆசிரியர் குழு
பின்னுட்டம்
(பின்னுட்டம் தொழில் நுட்ப ஆய்வுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது...)
பின்னுட்டம் இடுக