பாரத ஸ்டேட் வங்கியின் அக்டோபர் 1 ஆம் தேதி 2017 முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள் பின்வருமாறு :
வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கில் கடைபிடிக்க வேண்டிய குறைந்தபட்ச வைப்பு தொகையின் அளவை எஸ்பிஐ குறைத்துள்ளது. இவை : மெட்ரோ நகரங்களில் இருப்பவர்களின் குறைந்தபட்ச வைப்பு தொகை ரூ.5000லிருந்து ரூ.3000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
புறநகர் பகுதி வங்கி கிளைகளில் கணக்கு வைத்திருப்போரின் குறைந்தபட்ச வைப்பு தொகை அளவு ரூ.2000லிருந்து ரூ.1000ஆக குறைக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச வைப்புதொகைக்கும் கீழான தொகையை வங்கி கணக்கில் வைத்திருப்போரிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராதத் தொகையிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது :
குறைந்தபட்ச வைப்பு தொகையை வைக்காத புறநகர் பகுதி மற்றும் கிராமப்புற கிளைகளில் கணக்கு வைத்திருப்போரிடம் வசூலிக்கப்படும் அபராத தொகை ரூ.20லிருந்து ரூ.40 ஆக்கப்பட்டுள்ளது.
நகரம் மற்றும் மெட்ரோ கிளைகளில் கணக்கு வைத்திருப்போரிடம் வசூலிக்கப்படும் அபராதத் தொகை ரூ.30-லிருந்து ரூ.50 ஆக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச வைப்புதொகை கட்டாயம் என முறையிலிருந்து ஓய்வூதியதாரர்கள், அரசு நலத்திட்ட பயனாளர்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று அடிப்படை சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் மற்றும் பிரதமரின் ஜன்தன் கணக்கு வைத்திருப்போர் குறைந்தபட்ச வைப்பு தொகையை கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை.
எஸ்பிஐ.,யில் 42 கோடி சேமிப்பு கணக்குகள் உள்ளன. இவற்றில் 13 கோடி கணக்குகள் பிரதமரின் ஜன்தன் திட்டத்தின் கீழும், அடிப்படை சேமிப்பு கணக்கின் கீழும் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஸ்டேட் பேங்க் ஆப் பட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் பிகானர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ராய்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் திருவிதாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஐதராபாத் அல்லது பாரதிய மகிளா வங்கி ஆகிய வங்கிகளின் செக்புக் மற்றும் ஐஎப்எஸ் கோடு நாளை முதல் செல்லாது.