கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய அணைகளுள் ஒன்று ஓசூர் கெலவரப்பள்ளி அணை. இந்த அணை கர்நாடகத்தில் பெய்யும் மழை நீரையே நம்பியுள்ளது.
44.28 அடி கொண்ட கெலவரப்பள்ளி அணையில் தற்போது 43.70 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இதனால், கடந்த 15 ஆண்டுகளுக்கு பிறகு கெலவரப்பள்ளி அணையிலிருந்து அதிகப்படியான நீர் திறந்துவிடப்படுகிறது.
தற்போது அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் ஐந்து மதகுகள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டது. அந்த நீரில் நுரை பொங்கி வழிந்தோடுகிறது. இதனால் இந்தப் பகுதி விவசாய மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
நீரில் நுரை பொங்கி வருவதால் கெலவரப்பள்ளி அணைக்கு அருகில் உள்ள தட்டிகானப்பள்ளி மற்றும் பாத்தகோட்டா தரைப்பாலங்கள் மீது மலைபோல் நுரை குவிந்துள்ளது. இது அப்பகுதி மக்களிடையே சுற்றுச்சூழல் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாள்களுக்கு முன்னர் திருப்பூர் நொய்யலாற்றிலும் இதுபோல் ரசாயன நுரை பொங்கியது. திருப்பூரில் செயல்பட்டு வரும் சாய ஆலைகள், சட்டவிரோதமாக, திட்டமிட்டே நொய்யலாற்றில் கழிவுநீரைக் கலந்துவிட்டதால்தான், இப்படி நுரை பொங்கி ஓடியதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுபோல் ஆறுகளில் பொங்கும் ரசாயன நுரைக்கு சமீபத்தில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அது சோப்பு நுரை என்று கூறியதற்கு கொடுத்த விளக்கம் பல தரப்புகளிலும் எதிர்ப்புகளை எழுப்பியது.
இந்நிலையில், ரசாயன நுரையை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து பாயும் தென் பெண்ணை ஆற்றின் மூலம் அணைக்கு தண்ணீர் வருவதால், வழியில் உள்ள ரசாயன ஆலைகள் தங்கள் கழிவுகளை ஆற்றில் கலக்கவிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, ரசாயன நுரை ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.