பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் நாட்டின் பொருளாதாரத்தையே சிதைத்து விட்டார்கள் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா அதிரடியாக குற்றம் சாட்டியுள்ளார்.
“இந்தியாவில் வறுமை அதன் கடைசி நிலைக்கு வந்துவிட்டது என்கிறார், பிரதமர் மோடி; அந்தப் பொய்யைக் காப்பாற்றவே, அவரது நிதியமைச்சர் அருண் ஜெட்லி ஓவர் டைம் வேலை பார்க்கிறார்; இந்த உண்மையை இப்போதாவது பேசாவிட்டால் தனது தேசியக் கடமையிலிருந்து ஜெட்லி தவறியவராகி விடுவார்” என்று யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
“ஜெட்லி பதவிக்கு வந்தபோது, கச்சா எண்ணெய் விலை மிக மந்தமாக இருந்தது; ஆனால், இந்தியப் பொருளாதாரத்தை வலுவாக கட்டமைக்கக் கிடைத்த ஒரு பொன்னான வாய்ப்பை ஜெட்லி தவறவிட்டு விட்டார்; லட்சக்கணக்கான கோடி ரூபாயை வீணடித்து விட்டார்; இந்தியப் பொருளாதாரம் இப்போது தவறான நிலையிலிருந்து மோசமான நிலைக்குப் போய்விட்டது.
அதற்கு பணமதிப்பிழப்பு ஒரு முக்கிய காரணம். மோடியின் இந்த தவறான திட்டத்துக்கு அருண் ஜெட்லி முழு உடந்தையாக இருந்திருக்கிறார். ஜிஎஸ்டி வரி மோசமாக உருவாக்கப்பட்டு, மிகத் தவறாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது” என்றும்
“வளர்ச்சி 5.7 அல்ல; 3.7-க்கும் குறைவு இந்த உண்மைகளைச் சொல்வதில் தனக்கு எந்த அச்சமும் இல்லை; காரணம், பாஜக-வில் உள்ள பெரும்பான்மையோரின் மன நிலையும் இதுவே” என்றும் சின்ஹா விளாசியுள்ளார்.
மோடியின் நெருங்கிய நண்பரான குருமூர்த்தியும் பணமதிப்பின் குறைகளை அரசு களைய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ்-ஸின் தொழிலாளர் பிரிவான பாரதிய மஸ்தூர் சங் "நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்ததற்கு தவறான ஆலோசகர்களும் தவறான வழிகாட்டுதலால் ஆன சீர்த்திருத்தங்களுமே காரணம்" என்று சாடியுள்ளது.
“தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை, எப்போது வேண்டுமானாலும் வீட்டுக்கு அனுப்புதல், தொழிலாளர்கள் மீதான செலவைக் குறைத்தல், தொழிலாளர் குறைப்பு தொழில் நுட்பங்கள், அரசு முதலீட்டைத் திரும்பப் பெறுதல், ஆட்கள் தேர்வுக்கு தடை, பதவிகளை நீக்குதல், ஆகிய தொழிலாளர் விரோதப் போக்குகள் சட்டங்களில் காணப்படுகின்றன.
அந்நிய நேரடி முதலீடு ஏற்கெனவே நம் சிறிய மற்றும் மிகச்சிறிய தொழில்களை பாதித்து விட்டது. சில்லரை விற்பனைத் துறையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ள பிஎம்எஸ், தொழிலாளர்களை நம்பியுள்ள தொழிற்துறைகள் புத்துயிர் பெற உடனடியாக ஊக்க நடவடிக்கைகளை பிரதமர் மேற்கொள்ள வேண்டும்; மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் 100 நாட்கள் வேலையை 200 நாட்களாக உயர்த்த வேண்டும்; தற்போதைய சீர்த்திருத்தங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
ஆர்எஸ்எஸ் கொள்கைகளை பேசி வரும் பிஜேபி எம்பி சுப்ரமணிய சுவாமி அதள பாதாளத்தை நோக்கி இந்திய பொருளாதரம் செல்கிறது என்ற குண்டை வீசியுள்ளார் .
சொந்த கட்சியினர் மோடி மீது குற்றம் சுமத்தி வருவதால் பிஜேபி உள்ளே cold war ஆரம்பித்து விட்டதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்