ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, ஒத்திவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தலுடன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலும் நடந்தது. அப்போது, அதிமுக பொது செயலர் என்ற வகையில், வேட்பாளர்களுக்கான ‛பார்ம் பி' படிவத்தில் அரசு டாக்டர்கள் முன்னிலையில், ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டது.
திருப்பரங்குன்றம் தொகுதியில் தோல்வியடைந்த திமுக வேட்பாளர் சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வேட்பாளர் போஸ் வெற்றியை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். மேலும், அவர், போஸ் முறைகேடு செய்து வெற்றிபெற்றார். அவர் தாக்கல் செய்த பி படிவத்தில் ஜெயலலிதா வைத்திருந்த கைரேகை உண்மை தன்மையை ஆராய வேண்டும் எனக்கூறியிருந்தார்.
இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழக தேர்தல் அதிகாரி லக்கானி, திருப்பரங்குன்றம் தேர்தல் அதிகாரி விளக்கமளிக்க உத்தரவிட்டது. இதன்படி லக்கானி கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். இன்று, திருப்பரங்குன்றம் தேர்தல் அதிகாரி உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவர், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் அதிமுக வேட்பாளரின் பி பார்ம் ஏற்று கொண்டதாக கூறினார்.
இதனை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், இந்திய தேர்தல் ஆணையத்தின் முதன்மை செயலர் வரும அக்டோபர் 6ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.