நியூயார்க்கில் செய்தியாளர்களை சந்தித்த வடகொரியா வெளியுறவுத்துறை அமைச்சர் ரி யோங் ஹோ, தங்களுக்கு எதிரான போரை முதலில் அமெரிக்கா தான் அறிவித்ததாக குற்றம் சாட்டினார். எனவே அமெரிக்காவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வடகொரியா தயங்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார். வடகொரியாவின் வான் எல்லையில் மட்டுமல்ல, எல்லைக்கு வெளியே பறக்கும் போர் விமானங்களையும் சுட்டு வீழ்த்த தங்களுக்கு உரிமை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ரி யோங் ஹோ தெரிவித்துள்ள கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க செய்தித் தொடர்பாளர் விசானா சேன்டஸ், வடகொரியாவின் மீது போர் தொடுக்கும் அறிவிப்பு எதுவும் அமெரிக்கா வெளியிடவில்லை என்றார்.
ஒரு நாட்டின் வான் எல்லையில் இருக்கும் விமானங்களை மற்றொரு நாடு சுட்டு வீழ்த்துவோம் என்று கூறுவது சர்வதேச நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்றும் சாரா கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இலக்கில் மாற்றமில்லை என்ற அவர், கொரிய தீபகற்பத்தில் அமைதி நிலவுவதையே அமெரிக்கா விரும்புவதாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் வடகொரியாவின் நடவடிக்கையால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ள வேளையில், ஒருவேளை போர் மூண்டால் அச்சூழலை எதிர்கொள்ள தென்கொரியா தயாராகி வருகிறது.
உயிர் தப்ப முக்கிய பொருட்கள் அடங்கிய சிறய பை குறித்து தென்கொரியாவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது போர் நடைபெறும் சூழலில் உயிர் பிழைப்பது எப்படி என்று பலர் தங்களது கேமராவில் பதிவு செய்து அதனை இணையத்தில் பதிவேற்றியும் வருவது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி செய்தியாளரிடம் பேசிய லிம் சூக்கி என்ற தென்கொரிய பெண்மணி, போர் மூளும் அபாயம் இருக்கும் போதெல்லாம் அதனை எதிர்கொள் நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் இப்போது போர் நடைபெற்றால் அணுஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்றார்.
இதன் இடையே தங்களின் ஹைட்ரஜன் குண்டு வீசப்பட்டால் அமெரிக்கா பெரும் அழிவை சந்திக்கும் என்று வடகொரியா தெரிவித்துள்ளது.